அடித்தது 3 சதம்... அதில் 2 இரட்டை சதம்... ஜெய்ஸ்வால் அபாரம்


இரட்டை சதமடித்து அசத்திய இந்திய வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் தனது 2வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்து இந்திய கிரிக்கெட் வீரர் ஜெய்ஸ்வால் அபார சாதனை படைத்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று இருப்பதால் இந்த தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் இருந்து வருகிறது. 3வது டெஸ்ட் போட்டி கடந்த 15ம் தேதி சௌராஷ்டிரா மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

556 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் இந்திய அணி

ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சதம் அடித்த நிலையில், அறிமுக வீரர் சர்ஃப்ராஸ் கான் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து இருந்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் அடித்து அசத்தியிருந்தார். இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு விக்கெட் வீழ்த்திய நிலையில், சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்டுகளை கடந்த 2வது இந்திய வீரர் மற்றும் சர்வதேச அளவில் 9வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

3 சதங்களில் 2 இரட்டை சதம் அடித்து அசத்திய ஜெய்ஸ்வால்

இதேபோல் 2 வீக்கெட்டுகளை வீழ்த்திய ரவீந்திர ஜடேஜா, இந்தியாவில் நடைபெற்ற போட்டிகளில் 200 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையையும் படைத்தார். இதைத் தொடர்ந்து 2வது இன்னிங்ஸை இந்திய அணி துவங்கி விளையாடியது. சுப்மன் கில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 91 ரன்களில் அவர் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

இருப்பினும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஜெய்ஸ்வால், சர்வதேச கிரிக்கெட்டில் தனது 3வது சதத்தை பூர்த்தி செய்து விளையாடி வந்தார். இந்நிலையில் அவர் 214 ரன்கள் குவித்து இரட்டை சதம் அடித்தும் அசத்தினார். இதுவரை 3 சர்வதேச டெஸ்ட் போட்டி சதங்களை அடித்துள்ள ஜெய்ஸ்வால், அதில் இரண்டு முறை இரட்டை சதங்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்றொரு வீரரான சர்ஃப்ராஸ் கான் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்த போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் அவர் அரை சதம் விளாசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அறிமுக போட்டியின் 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து அசத்திய சர்ஃப்ராஸ் கான்

இதன் காரணமாக இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 430 ரன்கள் எடுத்திருந்தபோது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதனால் இந்திய அணி 556 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்று மற்றும் நாளை என இரண்டு நாள் போட்டி நடைபெறும் என்பதால் இந்திய அணி இந்த போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 557 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது 2வது இன்னிங்ஸை துவங்க உள்ளது.

x