இந்தியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - தென்னாப்பிரிக்க வீரர் பரபரப்பு கருத்து!


இந்தியாவுக்கு எதிரான தோல்வி எங்களுக்கு மாறுவேடத்தில் வந்த ஒரு அதிர்ஷ்டம். நாங்கள் இதன் மூலம் எங்கள் குறைபாடுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் ஆப்பிரிக்க அணியை அபாரமாக இந்திய அணி வீழ்த்தியது. இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அணிகளாக இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இருந்தன. இதன் காரணமாக போட்டிக்கு மிகுந்த எதிர்பார்ப்பும் இருந்தது.

இந்த நிலையில் போட்டி முழுவதுமாக இந்தியாவின் பக்கம் முடிந்தது. பேட்டிங்கில் 326 ரன்கள் குவித்து, பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்க அணியை 83 ரன்களுக்கு சுருட்டி, 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி புள்ளி பட்டியலில் லீக் சுற்றில் நிரந்தர முதலிடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை சந்திக்க வேண்டியது வராது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசி உள்ள தென்னாப்பிரிக்க அணியின் ஆல்ரவுண்டர் கேசவ் மகாராஜ், “இந்த போட்டி எங்களுக்கு ஒரு நல்ல சோதனை ஓட்டம் என்று நான் நினைக்கிறேன். நாங்கள் சிறப்பாக செயல்பட்டாக வேண்டிய பகுதிகளை இதன் மூலமாக அடையாளம் காண வேண்டும்.

நாங்கள் இந்த போட்டியை கடந்து இதற்கு முன்பாக மிகச் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறோம். நாங்கள் ஏற்கெனவே விளையாடிய முறைக்கு திரும்புவதும், மேலும் சுழற் பந்துவீச்சுக்கு எதிராக நாங்கள் போராட வேண்டிய பகுதிகளை அடையாளம் காண்பதும் முக்கியம்.

இந்த தோல்வி எங்களுக்கு அநேகமாக மிக நல்ல விஷயம். இது எங்களுக்கு மாறுவேடத்தில் வந்த ஒரு அதிர்ஷ்டம். இது எங்களுடைய கண்ணை திறந்து இருக்கிறது. நாங்கள் இதன் மூலம் எங்கள் குறைபாடுகளை சரி செய்து கொள்ள வேண்டும்” என்றார்

அவர் மேலும், “பவுன்ஸ் கண்டிஷனில் நாங்கள் நல்ல ஆட்டங்கள் விளையாடி உள்ளோம். எங்களுக்கு மேற்கொண்டு முன்னேறி செல்வதற்கான ஒரு நல்ல ஆலோசனையை உருவாக்குவதற்கு இந்த தோல்வி வழிகாட்டி இருக்கிறது.

கேசவ் மகாராஜ்

இந்தியாவிற்கு சொந்த மண்ணில் விளையாடுவதற்கான நன்மைகள் இருக்கிறது என்று எங்களுக்கு நன்றாக தெரியும். மேலும் பெரிய கூட்டத்திற்கு முன்னால் விளையாடுவது புதிது என்றாலும் அது எங்களை பயமுறுத்தவில்லை.

நாங்கள் மோசமான பந்துகளை வீசி அவர்களை அடிப்பதற்கு விட்டோம். பின்பு எங்களால் பேட்டிங்கில் ஒரு முனையில் இருந்து இன்டெண்ட் காட்ட முடியவில்லை. நாங்கள் ரொம்ப எளிமையாக சில விக்கெட்டுகளை இழந்தோம்.

ஜடேஜா ஆட்டத்தை ஒட்டுமொத்தமாக முடிக்கும் அளவிற்கான ஒரு பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஆனால் இதை சாக்காக சொல்ல முடியாது. நாங்கள் விளையாடுவதற்கு சம்பளம் பெற்றுக் கொள்கிறோம். எனவே நாங்கள் இதற்கு ஒரு வழியைக் கண்டுபிடித்தாக வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

x