ரோகித் ஷர்மாவின் அதிரடி சதம்; தோனியின் சாதனை முறியடிப்பு... சரிவிலிருந்து மீண்டது இந்தியா!


ரோகித் ஷர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 11வது சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். மேலும் இந்த போட்டியின் மூலம் தோனியின் சாதனை ஒன்றையும் அவர் முறியடித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால், முதல் பேட்டிங் எடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியின் இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 10 ரன்களிலும், சுப்மன் கில் டக் அவுட்டாகியும், பட்டிதர் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

ரோகித் ஷர்மா

இதன்பின் ரவீந்திர ஜடேஜா 5வது பேட்ஸ்மேனாக மாற்றி களமிறக்கப்பட்டார். அவருடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரரான ஹிட்மேன் ரோகித் ஷர்மா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஒருபக்கம் ஜடேஜா எந்த ரிஸ்கும் எடுக்காமல் பேட்டிங் செய்ய, இன்னொரு பக்கம் ரோகித் ஷர்மா பவுண்டரிகள்,சிக்சர்கள் மூலம் இந்திய அணி ஸ்கோரை உயர்த்தினார்.

சிறப்பாக பேட்டிங் செய்த ரோகித் ஷர்மா 71 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவரோடு ஜோடி போட்டு ஆடிய ஜடேஜா 97 பந்தில் அரைசதம் கடந்தார். இதையடுத்து ரோகித் ஷர்மா தனது பாணியில் ரன்களை குவிக்க தொடங்கினார். 196 பந்துகளில் 14 பவுண்டரிகள், 3 சிக்சருடன் 131 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் ஷர்மா மார்க் உட் பந்தில் ஆட்டமிழந்தார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா அடிக்கும் 11வது சதம் இதுவாகும். இங்கிலாந்து அணிக்கு எதிராக 3வது சதமாகும்.

33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிய போது, கேப்டனாக முன் நின்று இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டுள்ளார் ரோகித் சர்மா. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக 90 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார் ரோகித் ஷர்மா. இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள் பலரும் ரோகித் ஷர்மாவின் ஃபார்ம் குறித்து கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இன்றைய சதத்தின் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.

ஜடேஜா ரோகித் ஷர்மா

இந்த ஆட்டத்தில் ரோகித் 3 சிக்சர்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டெஸ்ட கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ் அடித்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். சேவாக் 90 சிக்சர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். தோனி 78 சிக்சர்களுடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது ரோகித் ஷர்மா 80 சிக்சர்கள் அடித்து தோனியை முந்தி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

x