[X] Close
 

இங்கிலாந்தில் போதிய பயிற்சி ஆட்டங்கள் ஆடவில்லை: தோல்விக்கு தோனி சொல்லும் காரணம்


dhoni-about-england-loss

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 14 Sep, 2018 17:09 pm
  • அ+ அ-

போதிய பயிற்சி ஆட்டங்கள் ஆடாததே பேட்ஸ்மேன்கள் சோபிக்காமல் போனதற்குக் காரணம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியுள்ளார்.

டி20 தொடரில் வெற்றியோடும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் தோல்வியோடும் இங்கிலாந்து சுற்று பயணத்தை இந்தியா முடித்தது. தொடர்ந்து இந்திய அணியின் தலைமை, பயிற்சி, பேட்டிங் என பல அம்சங்கள் குறித்து விவாதங்களும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இந்திய அணியின் தோல்வி குறித்து சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "இந்திய அணி தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு பயிற்சி ஆட்டங்களை ஆடாமல் போனதே பேட்ஸ்மென்கள் சூழலுக்கு ஏற்றவாரு அனுசரித்து ஆட கஷ்டப்பட்டதற்குக் காரணம். இது (தோல்வி) ஆட்டத்தின் ஒரு அங்கம். இந்திய தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று பதிலளித்தார்.

இந்திய அணி எஸ்ஸெக்ஸ் அணியுடன் ஒரே ஒரு பயிற்சி ஆட்டத்தில் மட்டுமே விளையாடியது. முன்னதாக இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நடந்த தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திலும், இந்திய அணி பயிற்சி ஆட்டங்களில் பங்கேற்கவில்லை. 

கேப்டன் பதவியை சீக்கிரத்தில் ராஜினாமா செய்தது குறித்து கேட்கப்பட்டபோது, "2019 உலகக்கோப்பைக்கு முன், புதிய அணித் தலைவருக்கு, அணியை தயார் செய்ய போதிய நேரம் வேண்டும் என்பதால்தான் நான் எனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன். ஒரு புது கேப்டனுக்கு போதிய நேரம் தராமல் வலுவான அணியை தேர்ந்தெடுத்தல் சாத்தியப்படாது. சரியான நேரத்தில் தான் நான் ராஜினாமா செய்துள்ளேன் என நம்புகிறேன்" என்று தோனி பதிலளித்தார்.

தோனி அடுத்ததாக செப்டம்பர் 15 தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடரில் விளையாடவுள்ளார்.

[X] Close