எனது ஹீரோவின் சாதனையை சமன்செய்தேன்... டெண்டுல்கர் பற்றி விராட் கோலி பெருமிதம்!


சச்சின் கோலி

'எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்தது எனக்கு மிகப்பெரிய பெருமை ' என சச்சின் டெண்டுல்கரின் பாராட்டுக்கு விராட் கோலி நெகிழ்ச்சியோடு பதில் அளித்துள்ளார். நேற்று டெண்டுல்கரின் 49 சதங்கள் என்ற சாதனையை கோலி சமன் செய்தார்.

உலகக் கோப்பையில் நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 326 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களும் எடுத்தனர். 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சதம் விளாசிய விராட் கோலி ஒருநாள் போட்டியில் 49-வது சதம் விளாசி இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் சாதனையை சமன் செய்தார்.. இந்தப் போட்டியில் 121 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். பிறந்த நாளில் சதம் அடித்தது அவருக்கு மேலும் சிறப்பானதாக அமைந்தது.

சச்சின் கோலி

இந்த நிலையில் விராட் கோலியின் இந்த சாதனைக்கு சச்சின் டெண்டுல்கர் தனது எக்ஸ் தளத்தில் பாராட்டுக்களை தெரிவித்தார். அவர், “ விராட் நன்றாக விளையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் 49ல் இருந்து 50க்கு செல்ல எனக்கு 365 நாட்கள் தேவைப்பட்டது. அடுத்த சில நாட்களில் 49லிருந்து 50க்கு சென்று எனது சாதனையை முறியடிப்பீர்கள் என நம்புகிறேன். வாழ்த்துகள்” என தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக விராட் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது. ' எனது ஹீரோவின் சாதனையை சமன் செய்வது எனக்கு மிகப்பெரிய பெருமை. இது ஒரு உணர்ச்சிபூர்வமான தருணம், நான் கடந்து வந்த நாட்கள் மற்றும் நான் சச்சினின் ஆட்டத்தை டிவியில் பார்த்து வளர்ந்தது வந்தவன். அவரிடம் இருந்து பாராட்டுகள் கிடைப்பது மிகப்பெரிய பெருமையாக கருதுகிறேன் ' என விராட் கோலி தெரிவித்துள்ளார்.

49வது சதத்தை பூர்த்தி செய்த விராட் கோலி

ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள்:

விராட் கோலி - 49 சதங்கள் (277 போட்டிகள்)

சச்சின் டெண்டுல்கர் - 49 சதங்கள் (452 போட்டிகள்)

ரோஹித் சர்மா - 31 சதங்கள் (251 போட்டிகள்)

ரிக்கி பாண்டிங் - 30 சதங்கள் (365 போட்டிகள்)

x