[X] Close
 

சாதகமான சூழலை பயன்படுத்திக்கொள்ளவில்லை: விராட் கோலி ஆதங்கம்


kohli-about-series-loss

கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 12 Sep, 2018 17:41 pm
  • அ+ அ-

இந்திய அணி வெற்றிக்கான சாதகம் வரும்போது அதை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதே தோல்விக்குக் காரணம் என இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

ஓவல் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த கோலி பேசியதாவது:

"தேநீர் இடைவெளியின் போது வெற்றி பெறுவோம் என்று நினைத்தோம். ஆனால் ராகுல், பந்த் இருவரும் இலக்கு 100 ரன்களுக்கு கீழ் வரும் வரை களத்தில் இருக்க வேண்டும் என்பது புரிந்தது. அப்போது வேண்டுமானால் எங்கள் வெற்றிக்கு வாய்ப்பு இருந்திருக்கும். இங்கிலாந்து அணியும் இருவரில் ஒருவர் ஆட்டமிழக்கும் வரை காத்திருந்து புதிய பந்தை தேர்ந்தெடுக்க முடிவெடுத்திருப்பார்கள் என்பதும் புரிந்தது.

உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் இவர்கள் இருவரும் ஆடிய விதத்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வந்தது. ஏனென்றால் அந்த சூழலில் வெற்றி, தோல்வி, ட்ரா என என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழலே இருந்தது.

முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கிறது. சில விஷயங்களை சரியாக செய்தால்தான் வெற்றி தோல்வி என எதுவேண்டுமானாலும் கிடைக்கலாம் என்ற நிலைக்கு வர முடியும். நமக்கு சாதகமாக சூழல் அமையும்போது அதை எப்படி வலிமையாக பற்றிக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எதிரணி மீண்டு வர விடாமல் தடுக்க வேண்டும்.

பெரும்பாலும் நாங்கள் எங்களுக்கான சாதகத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் எதிரணிக்கு தாரை வார்த்திருந்தோமே தவிர அவர்கள் அற்புதமாக ஆடி ஆட்டத்தின் நிலையை மாற்றவில்லை. சாம் கர்ரன் நன்றாக ஆடியுள்ளார் என்பது தெரியும். ஆனால் அவர் ஆடும் நிலையில் சிறப்பான பேட்டிங் என்பதைத் தாண்டி நாங்கள் நீண்ட நேரம் அழுத்தம் தரவில்லை என்பதுதான் நடந்தது.

நான் முன்னரே சொன்னது போல தொடரை சரியாகத் தொடங்க வேண்டும். முதல் போட்டியை பயிற்சி போல நினைக்கக் கூடாது. முதல் டெஸ்ட் போட்டி எப்போதும் முக்கியமானது. நாம் சரியான மனநிலையில் இருந்து எல்லாவற்றையும் சரியாக செய்து முதல் வெற்றியை பெறுகிறோம் என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று கோலி பேசினார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close