இலங்கை - சர்வதேச டென்னிஸ் பால் கிரிக்கெட்: தங்கம் வென்று புதுச்சேரி வீரர், வீராங்கனைகள் அசத்தல்  


புதுச்சேரி: இலங்கையில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் புதுச்சேரியைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கம் வென்று அசத்தியுள்ளனர்.

சர்வதேச டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி சார்பாக ஜூனியர் ஆண்கள் பிரிவு, சீனியர் ஆண்கள் பிரிவு மற்றும் பெண்கள் பிரிவு அணிகள் பங்குபெற்று விளையாடின.

இதில் ஜூனியர் ஆண்கள் அணியில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிரித்விராஜ், ஆதித்தியன், ஈபன் ஆகியோரும் சீனியர் ஆண்கள் அணியில் பிரசாந்த், ராகுல், எழில்வேலன், விஜய் ஆகியோரும், சீனியர் பெண்கள் அணியில் சுஷ்மிதா, பொன்மதி ஆகியோரும் பங்குபெற்று விளையாடினர்.

இலங்கை - இந்தியா இடையே நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. இத்தொடரில் வெற்றி பெற்று தாயகம் திரும்பிய புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அணி வீரர், வீராங்கனைகள் நேற்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்தையும், இன்று உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தையும் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

இது குறித்து இந்திய அணி சார்பில் பங்கேற்று விளையாடிய பிரசாந்த் நம்மிடம் பேசுகையில், ''ஆந்திரம், மும்பை, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து வீரர்கள் வந்தாலும், புதுச்சேரியில் இருந்து சென்று இந்திய அணி சார்பில் சர்வதேச டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டியில் விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.

இந்தப் போட்டியில் கலந்து கொண்டு விளையாட புதுச்சேரி டென்னிஸ்பால் கிரிக்கெட் அசோசியேஷன் செயலர் ரத்தினபாண்டியன் எங்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தார். அவருக்கும், பாராட்டி ஊக்கப்படுத்தியவர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்றார்.