இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனான ஷிகர் தவண், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
38 வயதான அவர், இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்டில் 34 ஆட்டங்களில் விளையாடி 7 சதங்களுடன் 2,315 ரன்கள் எடுத்திருந்தார். அதேவேளையில் 167 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 44.11 சராசரியுடன் 6,793 ரன்கள் குவித்திருந்தார். இடது கை பேட்ஸ்மேனான ஷிகர் தவண், கடைசியாக 2022-ம் ஆண்டு டிசம்பரில் வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டித் தொடரில் களமிறங்கியிருந்தார்.
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் உள்ளிட்ட 5 அணிகளுக்காக 221 ஆட்டங்களில் விளையாடி 127.14 ஸ்டிரைக் ரேட்டுடன் 6,769 ரன்கள் சேர்த்திருந்தார். தனது ஓய்வு முடிவுகுறித்து சமூக வலைதளத்தில் ஷிகர் தவண் கூறும்போது, “எனது கிரிக்கெட் பயணத்தின் இந்த அத்தியாயத்தை முடித்துக்கொள்கிறேன். இதில் எண்ணற்ற நினைவுகளையும் நன்றியையும் என்னுடன் சுமந்து செல்கிறேன்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.வாழ்க்கையில் முன்னேற பக்கத்தைத் திருப்புவது முக்கியம், அதனால்தான் சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அறிவிக்கிறேன். இந்தியாவுக்காக இவ்வளவு காலம் விளையாடியதை நினைத்து மனதில் நிம்மதியுடன் விடைபெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.