[X] Close

சதம் அடிக்காமல் தர்மசங்கடம் ஆகியிருக்கும்: பும்ராவுக்கு நன்றி தெரிவிக்கும் குக்


cook-about-his-century

கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 11 Sep, 2018 16:55 pm
  • அ+ அ-

புஜாரா பந்தை விரட்டிப் பிடித்திருந்தால் தான் சதம் அடித்ததாகக் கொண்டாடியது வீணாகியிருக்கும். நல்லவேளையாக அப்படியேதும் நடக்கவில்லை என இங்கிலாந்து வீரர் அலஸ்டைர் குக் கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நான்காம் நாளான நேற்று, இங்கிலாந்து வீரர் குக் சதமடித்தார். இது அவரது கடைசி டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய குக், "நம்மை வெளியே துரத்துவதை விட நம்மிடம் இருந்து இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பது நல்லதுதான். எனது சதம் நான் ஓய்வு பெறும் முடிவை தீர்மானமாக்கியுள்ளது. கடந்த 12-18 மாதங்களாகவே நான் யோசித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு தொடரில் அல்லது சில நாட்கள் மோசமாக விளையாடுவதினால் அல்ல. இதுதான் நேரம். எனக்கான நேரம். என் குடும்பத்துக்கான நேரம். இங்கிலாந்துக்கான உங்களது கடைசி இன்னிங்ஸில் சதம் எடுப்பது, நான் நினைத்தபடி ஓய்வு பெறுவது, உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அது எப்படி என்னால் முடிந்தது என்று எனக்கே தெரியவில்லை.

97வது ரன்னுக்கு கட் ஷாட் ஆடியது எனக்கு நினைவில் இருக்கிறது. பும்ரா பந்தை எடுத்து த்ரோ அடிக்கும்போது, வேகமாக அடித்து விட்டாரே என்று உரைத்தது. (ஓவர்த்ரோ) நேரடியாக பவுண்டரிக்கு சென்று விட்டது என்று நினைத்தேன். புஜாரா பந்தை விரட்டிச் சென்றதை பார்க்கவில்லை. ஒருவேளை அவர் பந்தை தடுத்து நிறுத்தி, அதற்கு முன்னரே நான் சதத்துக்காக கொண்டாடியிருந்தால் தர்மசங்கடமாகியிருக்கும். அப்படி நடக்காதது எனக்கு நெஞ்சுவலி வராமல் காப்பாற்றியது. பும்ரா இந்தத் தொடரில் எனக்கு நிறைய நெஞ்சு வலியைத் தந்திருக்கிறார். அதற்கு பதிலாக இந்த சின்ன தருணத்தை அவர் தந்ததற்கு அவருக்கு நான் நன்றி சொல்வேன்.

எல்லோரும் தொடர்ந்து கைதட்டிக் கொண்டே இருந்தனர். அற்புதமாக இருந்தது. மறுபக்கம் இருந்த ரூட், 'ஒரு நிமிடம், நானும் தான் ரன்கள் சேர்த்திருக்கிறேன்' என்பது போல இருந்தார். அவர் பேட்டிங் செய்ய ஆயத்தமாகியபோதும் எனக்கான கைதட்டல் நிற்கவில்லை" என்றார்.

குக் ஆடுவதைப் பார்க்க, கர்ப்பமாக இருக்கும் அவரது மனைவியும் மைதானத்துக்கு வந்திருந்தார். குக் தம்பதி தங்களது மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது பற்றி குக், "என் வாழ்க்கையிலேயே இந்த நான்கு நாட்கள் தான் கனவு போல நம்பமுடியாத அளவு கடந்து போனது. என் மனைவிக்கு இன்று பிரசவம் நடந்தால் அது நடந்த எல்லாவற்றையும் மிஞ்சி விடும்" என்று குறிப்பிட்டார்.

தனது முதல் டெஸ்ட் போட்டியை இந்தியாவுடன் விளையாடிய குக், அதிலும் சதமடித்தார். இப்போது கடைசி டெஸ்ட் போட்டியையும் இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ள குக், சதமடித்துள்ளார். இதுவரை கிரிக்கெட் வரலாறில் மொத்தம் 5 வீரர்களே இப்படியான சாதனையை செய்துள்ளனர்.

"இது எப்படி நடக்கிறது என்பது வித்தியாசமாக இருக்கிறது. யார் இதையெல்லாம் முடிவு செய்கிறார்கள் என்று தெரியவில்லை" என குக் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close