[X] Close

செரீனா வில்லியம்ஸின் பாலின பேத புகார்: கலவையான கருத்துகளைக் கூறும் டென்னிஸ் உலகம்


tennis-williams-u-s-open-treatment-divides-tennis-world

  • பாரதி ஆனந்த்
  • Posted: 10 Sep, 2018 10:11 am
  • அ+ அ-

டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், டென்னிஸ் போட்டிகளில் பாலின பேதம் இருப்பதாகக் கூறியிருக்கும் கருத்து டென்னிஸ் விளையாட்டு உலகில் இருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடுவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ராக்கெட்டை தூக்கி எறிந்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், "டென்னிஸ் போட்டிகள் இன்னும் பெண்களை கவர்ச்சிப் பொருளாகவே பார்க்கிறது" என்ற பரபரப்பு குற்றச்சாட்டை பதிவு செய்தார்.

அண்மையில் அவரது நைக் பிளாக் பாந்தர் ஆடை சர்சைக்குள்ளானது. அந்த ஆடையை கிராண்ட்ஸ்லாம் போட்டியில் அவர் அணியக்கூடாது என்று டென்னிஸ் நிர்வாகம் உறுதியாகத் தெரிவித்தது.

இந்நிலையில், யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில், "நான் டென்னிஸ் போட்டிகளில் பலமுறை பார்த்திருக்கிறேன். நடுவர் வீரர்களிடம் மிகவும் மரியாதையாகவும், வீராங்கனைகளிடம் மரியாதைக் குறைவாகவும் நடக்கிறார்கள். நான் இங்குப் பேசுவதெல்லாம் பெண்கள் உரிமைக்காகவும், பெண்களின் சமத்துவத்துக்காகவும் பேசுகிறேன். ஆனால் டென்னிஸ் போட்டிகள் இன்னும் பெண்களை கவர்ச்சிப் பொருளாகவே பார்க்கிறது" என்று அவர் ஆவேசமாகப் பேசினார்.

சைகை காட்டினாரா பயிற்சியாளர்?
போட்டியின் இடையே செரீனா வில்லியம்ஸின் பயிற்சியாளர் மைதானத்துக்கு அருகே நின்றுகொண்டு செரினாவுக்கு ஏதோ சைகையால் கூறியதாக நடுவர் கார்லோஸ் ரமோஸ் செரீனாவை கண்டித்தார். இது டென்னிஸ் போட்டி விதிமுறைகளுக்கு எதிரானது என்று தெரிவித்தார்.

ஆனால், நடுவர் ரமோஸின் குற்றச்சாட்டை செரீனாவோ கடுமையாக மறுத்து அவரிடம் ஆவேசமாகப் பேசினார். ஒரு கட்டத்தில் தனது கோபத்தை அடக்க முடியாமல் கையில் வைத்திருந்த டென்னிஸ் ராக்கெட்டை வீசி எறிந்தார் செரீனா.
அதன்பின் செரீனா ஆவேசமாகப் பேசுகையில், "யாரைப் பார்த்து பொய்யர், ஏமாற்றுக்கார் என்று கூறினீர்கள். நீங்கள்தான் ஏமாற்றுக்காரர். நான் ஏமாற்றுக்காரி இல்லை.

படம் உதவி: ராய்ட்டர்ஸ்

என்னிடம் இவ்வாறு பேசியதற்கு நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும். நான் டென்னிஸ் போட்டி உளப்பூர்வமாக நேசிக்கிறேன். அதனால், ஏமாற்றி விளையாட வேண்டிய அவசியம் இல்லை. நானும் எனது பயிற்சியாளரும் எந்தவிதமான
சைகையும் காட்டவில்லை, சைகையாலும் பேசிக்கொள்ளவில்லை. ஏமாற்றித்தான் இந்தப் போட்டியில் வெல்ல வேண்டுமென்றால், இந்தப் போட்டியில் நான் தோற்றுவிடுகிறேன்" என்றார்.

செரீனாவுக்கு அபராதம்:

நடுவரின் தீர்ப்பில் தலையிட்டது, டென்னிஸ் மட்டையை முறைகேடாகப் பயன்படுத்தியது, நடுவரைச் சாடியது ஆகியவற்றுக்காக செரீனா வில்லியம்ஸுக்கு 17,000 டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க டென்னிஸ் சங்கம்.

செரீனாவின் கோபமும் டென்னிஸ் உலகின் கருத்தும்!

டென்னிஸ் ஜாம்பவானான பில்லி ஜீன் கிங், "ஒரு பெண் உணர்ச்சிவசப்பாட்டால் அவருக்கு ஹிஸ்டீரியா எனக் கூறி தண்டிக்கின்றனர். ஆனால், ஓர் ஆண் அதையே செய்தால் அவர் வெளிப்படையாகப் பேசுபவர் என்று கூறி எந்த அதிர்வலையும் இல்லாமல் பார்த்துக் கொள்கின்றனர். டென்னிஸ் உலகின் இரட்டை நிலைப்பாட்டை
வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததற்கு நன்றி செரீனா வில்லியம்ஸ். இதுபோன்ற நிறைய குரல்கள் இணைய வேண்டும்"
என்றார். மூத்த வீராங்கனையின் ஆதரவுக் குரல் ட்விட்டர் வாயிலாக செரீனாவுக்குக் கிடைத்துள்ளது.

அதே வேளையில், ஆஸ்திரேலியாவின் மூத்த வீராங்கனை மார்கெரட் கோர்ட், "நாம் எப்போதுமே விதிகளுக்கு உட்பட்டுத்தான் ஆக வேண்டும். விதிகளைவிட விஞ்சி நிற்க ஒரு வீரர் முயன்றால் அது வருத்தத்துக்கு உரியதே. இளம் வீராங்கனை ஒசாகா முதல் செட்டிலியே தன்னைவிட முன்னேறியது செரீனாவுக்கு அழுத்தத்தை
தந்திருக்கலாம்"
எனக் கருத்து கூறியுள்ளார்.
 
7 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற மெக் என்ரோ, "டென்னிஸ் உலகில் இரட்டை நிலைப்பாடு இருப்பதாக செரீனா கூறியது சரியே. இதில் வேறு கேள்வியே இல்லை" எனக் கூறியிருக்கிறார்.

பிரபல டென்னிஸ் நடுவர் ரிச்சர்ட் இங்க்ஸ், "ராமோஸ் எடுத்த முடிவில் பாலின பேதமும் இல்லை. இனவாதமும் இல்லை. எல்லாமே விதிமுறைகள் சார்ந்ததே. கிராண்ட் ஸ்லாம் விளையாட்டின் விதிமுறை தெளிவாக மீறப்பட்டிருக்கிறது. அதை துணிச்சலுடன் எந்த சார்பும் இல்லாமல் அவர் வெளிக்கொணர்ந்திருக்கிறார்" எனக் கூறியிருக்கிறார்.

ஹாலிவுட்டில் நிலவிய பாலியல் அத்துமீறலை 'ஹார்வி வெயின்ஸ்டீன்' சர்ச்சை வெளிக் கொண்டுவந்ததைப் போல் டென்னிஸ் உலகில் பாலின பேதத்தை செரீனாவின் குரல் வெளிக் கொண்டுவருமா என்பதை பொருத்திருந்தே பார்க்க வேண்டும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close