தென்னாப்பிரிக்கா மீண்டும் முதலிடம்… 190 ரன் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது!


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்கா அணி, நியூசிலாந்தை 190 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.

புனேவில் நடைபெற்ற போட்டியில் பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் குயின்டன் டி காக் வழக்கம் போல் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோர் உயர வித்திட்டார்.

மறுமுனையில் வாண்டர் டூசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் அபாரமாக ஆடிய சதம் அடித்தனர். டி காக் 114 ரன்களில் ஆட்டமிழந்தார். இது இந்த உலகக்கோப்பை தொடரில் அவரது 4-வது சதமாகும்.

இருவரும் 2-வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பிற்கு 200 ரன்கள் குவித்தனர். வாண்டர் டூசன் 118 பந்துகளில் 133 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். கடைசியாக டேவிட் மில்லர் அதிரடியில் மிரட்ட தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 357 ரன்கள் குவித்தது.

358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. ஆனால், அணியின் வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நம்பிக்கை அளித்துவரும் வீரர்களான கான்வே, ரச்சின் ரவிந்திரா ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.

தொடக்கம் முதலே தடுமாறிய நியூசிலாந்து அணி 35.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 167 ரன்களில் சுருண்டது. 190 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அபார வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது.

தென்னாப்பிரிக்க அணி தரப்பில் அதிகபட்சமாக கேசவ் மகாராஜ் 4 விக்கெட்டுகளும், மார்கோ ஜான்சன் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டூசன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

x