2034ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை ஆஸ்திரேலியா தவிர்த்ததால், அந்த வாய்ப்பு சவுதி அரேபியாவிற்கு உறுதியாகியுள்ளது.
உலகில் அதிக நாடுகளில் விளையாடப்படும் விளையாட்டாக கால்பந்து உள்ள நிலையில், உலகில் அதிக அளவு ரசிகர்களால் பார்க்கப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக பிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி தொடர் இருந்து வருகிறது.
4 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை உறுதி செய்ய பல ஆண்டுகளுக்கு முன்பே ஏலம் மூலம் உறுதி செய்யப்படும். அந்த வகையில் வருகிற 2026ம் ஆண்டு போட்டிகளை அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதேபோல் 2030ம் ஆண்டு போட்டிகளை ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகியவை இணைந்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே 2034ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை நடத்த, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் ஆர்வம் காட்டின. இதில் ஆஸ்திரேலியா முன்னணியில் இருந்து வந்தது. இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர், சவுதி அரேபியாவிற்கு ஆதரவாக ஏலப்போட்டியில் இருந்து விலகின.
ஆஸ்திரேலியாவிற்கு இந்த வாய்ப்பு உறுதியாகும் என கருதப்பட்ட நிலையில், திடீரென முடிவை மாற்றிக்கொண்ட அந்நாட்டு கால்பந்து அமைப்பு, போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவிற்கு இந்த வாய்ப்பு உறுதியாகும் நிலை உருவாகியுள்ளது.
அடுத்த ஆண்டு இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சவுதியில் போட்டிகள் நடைபெற்றால், அங்கு நிலவும் வெப்பத்தை கருத்தில் கொண்டு வழக்கமாக நடைபெறும் ஜூன் ஜூலை மாதங்களுக்கு முன்னதாகவே போட்டிகள் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக கடந்த 2022ம் ஆண்டு கத்தார் நாட்டில் உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
பாரதியார் சிலை முன்பு சாதி மறுப்பு திருமணம்... காதல் ஜோடிக்கு குவியும் பாராட்டு!
கடலூரில் பரபரப்பு... ஒரே நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகளில் போலீஸார் சோதனை!