நடைபெற்றுவரும் உலகக் கோப்பையில் அரையிறுதிக்குச் செல்ல போகும் அணிகள் எவை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதனால் இந்த உலகக் கோப்பை விறுவிறுப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளது
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் தொடக்கத்தில் பூனையாக இருந்த சில அணிகள் தற்போது புலியாக மாறி உள்ளன. நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் ருத்ரதாண்டவம் ஆடும் நிலையில், இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் பெட்டி பாம்பாக அடங்கியுள்ளது.
இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்து வருகிறது. முதலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வென்றது. அடுத்து ஆப்கானிஸ்தான் அதை தொடர்ந்து பாகிஸ்தான் கடைசியாக வங்கதேசம் என்று அடுத்தடுத்து வரிசையாக 4 போட்டிகளை இந்தியா வென்றது. அதன்பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடந்த போட்டியிலும் இந்திய வென்றுள்ளது. இதன் மூலம் 5 போட்டிகளில் வரிசையாக இந்திய அணி வென்றுள்ளது. இந்த சீசனில் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத ஒரே அணி இந்திய அணிதான்.
தென்னாப்பிரிக்கா: இன்னொரு பக்கம் 6 போட்டிகளில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி இதுவரை 5 போட்டிகளில் வென்றுள்ளது. கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் கூட தென்னாப்பிரிக்க அணி அதிரடியாக வென்றது. நெட் ரன் ரேட் +2.032 என்று உச்சத்தில் உள்ள அந்த அணி, உலகக்கோப்பை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
நியூசிலாந்து: இன்னொரு பக்கம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது. அதன்பின் நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக வீழ்ந்தது. இந்த போட்டியை தவிர வரிசையாக மற்ற போட்டிகளிலும் வென்றுள்ளது. இதனால் நியூசிலாந்து கிட்டத்தட்ட அரையிறுதிக்குச் செல்வது உறுதியாகி உள்ளது.
இன்னொரு பக்கம் ஆச்சர்யம் அளிக்கும் விதமாக 2 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கீழே இருந்த ஆஸ்திரேலியா அணி மீண்டும் பார்மிற்கு திரும்பி உள்ளது. மீண்டும் அந்த அணி கொஞ்சம் கொஞ்சமாக மேலே வந்துள்ளது. இரு தோல்விகளுக்குப்பின் வரிசையாக எல்லா போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அதன் வீரர்களும் பார்மிற்கு வந்துள்ளனர். இந்த ஆஸ்திரேலியா அணியின் வருகையால் 3 பெரிய அணியில் ஒரு அணி செமி பைனல் வாய்ப்பை இழக்கும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
ஆனால் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி 5 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வென்றுள்ளது. பாகிஸ்தான் 6 போட்டிகளில் ஆடி 2 போட்டியில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் இரண்டு அணிகளின் செமி பைனல் வாய்ப்பும் வெகுவாக குறைந்துள்ளது. இலங்கை அணியும் இரு போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. எனவே இந்த மூன்று அணிகளும் அரையிறுதிக்குச் செல்லவேண்டுமானால் அடுத்துவரும் அனைத்து போட்டிகளிலும் நல்ல ரன்ரேட்டில் வெல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அரையிறுதிக்கான வாய்ப்பு குறித்த கணிப்புகள் இதுதான்...
தென்னாபிரிக்கா - 98%
இந்தியா- 98%
நியூசிலாந்து - 87%
ஆஸ்திரேலியா - 87%
இலங்கை - 10%
ஆப்கானிஸ்தான் - 10%
பாகிஸ்தான் - 4%
நெதர்லாந்து - 4%
வங்கதேசம் - 1%
இங்கிலாந்து - 1%
ஆகியவைதான் அணிகளின் அரையிறுதி வாய்ப்பு ஆகும். இதனால் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்குச் செல்வதும் இயலாத காரியம் ஆகி உள்ளது .