[X] Close
 

அஸ்வின் விக்கெட் எடுக்காததால் தான் தொடரை இழந்துள்ளோம்: ஹர்பஜன் சிங் விமர்சனம்


harbhajan-criticizes-ashwin

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 05 Sep, 2018 12:21 pm
  • அ+ அ-

இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சரியாக பந்துவீசி விக்கெட் எடுக்க முடியாத காரணத்தால் தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இந்திய அணி இழந்துள்ளது என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் இந்தியா தொடரை இழந்துள்ளது. இன்னும் ஒரு டெஸ்ட் போட்டி மீதமுள்ள நிலையில், இந்திய அணியின் தலைமை, பயிற்சி, பேட்டிங், பீல்டிங் என ஒவ்வொரு அங்கம் குறித்தும் விமர்சனங்கள் பல்வேறு தரப்பிலிருந்து வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்திய முன்னாள் வீரரும், இந்தியாவின் முன்னணி ஸ்பின்னர்களில் ஒருவராக இருந்த ஹர்பஜன் சிங், அஸ்வின் விக்கெட் எடுக்காததே தோல்விக்குக் காரணம் என்று பேசியுள்ளார். 

தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "சவுத்தாம்ப்டன் களம் ஆஃப் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தது. பந்தை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து பிட்ச் செய்து வீசி வந்தாலே நிறைய விக்கெட்டுகள் கிடைத்திருக்கும். அதைத்தான் மோயின் அலி செய்து நிறைய விக்கெட்டுகளை எடுத்தார். அஸ்வினை விட மோயின் அலி சிறப்பாக பந்துவீசியதில்தான் இந்தியா தோற்றுள்ளது.

முதல்முறையாக நமது ஸ்பின்னர்களை விட இங்கிலாந்து ஸ்பின்னர்கள் சிறப்பாகப் பந்துவீசுவதை நான் பார்த்தேன். அஸ்வினால் விக்கெட் எடுக்க முடியாததே 1-3 என நாம் தொடரை இழக்கக் காரணம். அஸ்வின் உயர்ந்த பவுலர். இந்தியாவுக்காக நிறைய சாதித்திருக்கார். ஆனால் எப்போது முக்கியத் தேவையோ அப்போது விக்கெட்டுகளை எடுக்கத் தவறிவிட்டார். அதுவும் (4-வது டெஸ்ட் போட்டியின்) மூன்றாவது நாள் அன்று. அவர் வெறும் 2-3 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருந்தர். ஐந்து விக்கெட்டுகளை கூட எடுக்கவில்லை. அப்படி எடுத்திருந்தால் இந்தியா 160-170 ரன்களைத் தான் வெற்றி இலக்காகக் கொண்டிருக்கும். அதை நாம் கண்டிப்பாகத் தொட்டிருக்கலாம். 

"(3வது டெஸ்ட் போட்டியில்) அஸ்வினுக்கு ஏற்பட்ட காயம் எவ்வளவு தீவிரமானது என்பது எனக்குத் தெரியாது. அது தீவிரமானது என்றால் அணி நிர்வாகத்துக்கு அது தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் சரியான உடற்தகுதியோடு தான் இருந்தார் என்றால், அவர் எதிர்பார்த்த அளவுக்கு வீசத் தவறிவிட்டார். மோயின் அலி இங்கிலாந்து அணியில் மீண்டும் இடம் பிடிக்கும் வழி தேடிக்கொண்டிருந்தார். ஆட்டநாயகன் விருதை வென்றார். அவர் மிகச்சிறந்த பவுலர். ஆனால் தன்னை பெரிய பவுலராக நினைத்துக்கொள்ளாதவர். 

எப்போதுமே மற்றவர்களை விட நன்றாக வீசுவார். ஏனென்றால் அவர் வீசும் பந்தின் போக்கு மிக நன்றாக இருக்கும். 2014-ஆம் ஆண்டிலிருந்தே இந்திய அணி அவரது பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்பதை தெரிந்துகொள்ளவில்லை. அப்போது இதே மைதானத்தில் அவர் நமக்கு எதிராக அற்புதமாக விளையாடினார்" என்று ஹர்ப்ஜன் குறிப்பிட்டுள்ளார். 

[X] Close