கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், காரில் பயணத்தபோது வழியில், 'டெண்டுல்கர்' என பெயர் பொறித்த ஜெர்சி அணிந்திருந்த தனது ரசிகரைச் சந்தித்தார்.
முன்னாள் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின், ‘டெண்டுல்கர்' என பெயர் பொறித்த ஜெர்சி அணிந்து சென்ற தனது ரசிகரை சாலை பயணத்தின்போது சந்தித்த மகிழ்வான தருணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோவை எக்ஸ் தளத்தில் சச்சின் வெளியிட்டார். அந்தப் பதிவில், ‘சச்சின், டெண்டுல்கரைச் சந்திக்கிறார். என் மீது இவ்வளவு அன்பு பொழியப்படுவதைப் பார்க்கும்போது அது என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. எதிர்பாராத மூலைகளிலிருந்து வரும் மக்களின் அன்பே வாழ்க்கையை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஆக்குகிறது’ என குறிப்பிட்டுள்ளார் சச்சின்.
அந்த ரசிகருடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்ட சச்சின், அவருக்கு தனது ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார். மேலும், அவருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றபோது, தலைக்கவசம் அணிந்து சென்றதற்காக அந்த ரசிகரை இந்த சந்திப்பின்போது சச்சின் பாராட்டவும் தவறவில்லை.
சச்சினை திடீரென சந்தித்ததால் இன்ப அதிர்ச்சி அடைந்த அந்த ரசிகர், "இன்று என் கடவுளைச் சந்தித்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என தெரிவித்தார்.
2011-ம் ஆண்டில் சச்சின் இடம்பெற்றிருந்த இந்திய அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது. கிரிக்கெட் கடவுள் என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் சாதனைகளுக்கு பஞ்சமில்லாதவர் சச்சின் டெண்டுல்கர். இவர், கடந்த 2008 முதல் 2013-ம் ஆண்டு வரை, தான் பங்கேற்ற 6 ஐபிஎல் சீசன்களிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மட்டுமே விளையாடினார்.
டெண்டுல்கரை, சச்சின் சந்தித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.