அண்டர் 19 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 296 ரன்கள் என்ற இலக்கோடு ஆடிய நியூசிலாந்து அணி 28.1 ஓவர்கள் மட்டுமே விளையாடி 81 ரன்களில் சுருண்டு விட்டது. இதன் மூலம் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் சூப்பர் 6 சுற்றின் முதல் போட்டியில் மோதிக்கொண்டன.
இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர் அர்சின் குல்கர்னி 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் ஆதர்ஸ் சிங் 52, கேப்டன் உதய் ஷஹாரன் 34 ரன்கள் எடுத்தார்கள். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யும் முஷீர் கான் இந்தப் போட்டியிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மேலும் இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தை அடித்தார். ஏற்கனவே அயர்லாந்து அணிக்கு எதிராக இவர் 118 ரன்கள் அடித்திருந்தார்.
முஷீர் கான் மொத்தமாக 126 பந்துகளை சந்தித்து 13 பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் அடித்து 131 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது.
296 ரன்கள் கடினமான இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆட்டத்தின் முதல் பந்திலேயே இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ராஜ் லிம்பானி செக் வைத்தார். முதல் பந்திலேயே டாம் ஜோன்ஸ் அவுட்டானார்.
இதிலிருந்து நியூசிலாந்து அணியால் கடைசி வரை நிமிரவே முடியவில்லை. மொத்தமாக நியூசிலாந்து அணி 28.1 ஓவர் விளையாடி 81 ரன்களில் சுருண்டு விட்டது. இதன் மூலம் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. இதனால் இந்தச் சுற்றில் இந்திய அணிக்கு நல்ல ரன் ரேட் கிடைத்திருக்கிறது.
இந்திய அணியின் பந்துவீச்சில் சௌமி பாண்டே 4 விக்கெட்டுகளையும், ராஜ் லிம்பானி, முஷீர் கான் தலா 2 விக்கெட்டுகளையும், நமன் திவாரி மற்றும் அர்சின் குல்கர்னி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்கள். ஆட்டநாயகனாக முஷீர் கான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... இனி கணவருக்கு இல்லை பென்ஷன்... குழந்தைக்குத் தான்!