இந்த உலகின் தனக்கான நேரம் முடிந்துவிட்டது என்றே நினைத்ததாக கார் விபத்து குறித்த தனது நினைவை ரிஷப் பண்ட் பகிர்ந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனாக விளையாடி வந்தவர் ரிஷப் பண்ட். இவரது அதிரடி ஆட்டத்தால், பல போட்டிகளில் இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தந்தவர். கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதி அதிகாலை கார் விபத்தில் சிக்கினார்.
சொந்த ஊரான உத்தராகண்ட்டின் ரூர்கிக்கு தனது சொகுசு காரில் சென்ற ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர், உயிர் தப்பினார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக மருத்துவச் சிகிச்சை பெற்று வரும் அவர், தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்துக்குத் திரும்பியுள்ளார். விரைவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் அவர் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தனக்கு நேர்ந்த கார் விபத்து குறித்து மனம் திறந்துள்ள அவர், “கார் விபத்தில் சிக்கியவுடன் இந்த உலகத்தில் தனக்கான நேரம் முடிந்துவிட்டது, இறந்துவிடுவேன் என நினைத்தேன்” என்று ரிஷப் பண்ட் உருக்கமுடன் தெரிவித்துள்ளார். மேலும், “விபத்து ஏற்பட்டபோது எனக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து அறிந்திருந்தேன். அதிர்ஷ்டம் இருந்ததால் பெரிய அளவில் பயப்படும் படியான அளவுக்கு எதுவும் ஏற்படவில்லை.
யாரோ ஒருவர் என்னைக் காப்பாற்றியதாக உணர்ந்தேன். காயங்களிலிருந்து குணமடைய எவ்வளவு காலம் ஆகும் என கேட்டபோது, மருத்துவர்கள் 16-18 மாதங்கள் ஆகும் என தெரிவித்தனர். காயத்திலிருந்து மீண்டு வரும் காலங்கள் கடினமாக இருக்கும் என்பதை நான் உணர்ந்திருந்தேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...