ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 21வது லீக் ஆட்டம் தரம்சாலாவில் நேற்றிரவு நடந்தது. இதில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 274 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. விராட் கோலி 95 ரன்கள் குவித்தார். இதன்மூலம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 5 பவுண்டரிகள் உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். சுப்மன் கில் 38 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்து அசத்தியுள்ளார். ஏற்கெனவே, தென் ஆப்பிரிக்க அணியின் ஹசிம் ஆம்லா 40 இன்னிங்சில் 2,000 ரன்களைக் கடந்திருந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.