இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி நிதானமான ஆட்டத்தை தொடர்ந்து வருகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து இங்கிலாந்து சார்பில் களமிறங்கிய ஜாக் க்ராலி 20 ரன்களிலும், பென் டெக்கட் 35 ரன்களிலும், ஒல்லி போல் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
உணவு இடைவேளையின் போது முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 108 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா தரப்பில் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி உள்ளனர்.
இந்த போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அஸ்வின் அணிக்கு திரும்பியிருப்பது இந்தியாவிற்குச் சாதகமாக பார்க்கப்படுகிறது. முகமது சிராஜ், அக்சார் பட்டேல், ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர்.
இதே போல் பேட்டிங்கில் ரோகித் ஷர்மா, சுப்மன் கில், ஜெய்ஸ்வால், ராகுல், ஸ்ரேயாஸ், ஜடேஜா ஆகியோர் அசத்துவார்கள் என எதிர்பார்ப்படுகிறது. புதுமுகமாக அறிமுகமாகியுள்ள ஸ்ரீகர் பரத் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதே போல் இங்கிலாந்து அணியும், உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட தோல்விகளில் இருந்து மீள்வதற்கான முயற்சிகளை டெஸ்ட் போட்டிகளில் செலுத்த முயன்று வருகிறது. நட்சத்திர வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ் ஆகியோர் இன்றைய போட்டியில் சிறப்பான பங்களிப்பை வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
தைப்பூச ஜோதி தரிசனம்... வடலூரில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!
அதிர்ச்சி... காதல் திருமணம் செய்த முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனின் மருமகள் உயிரிழப்பு!