வயதை பார்த்து சலுகை கொடுக்க மாட்டார்கள்: மனம் திறக்கும் தோனி


சென்னை: ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதனது கடைசி லீக் ஆட்டத்தில் ராயல்சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்தும் வெளியேறியது. இந்த தொடருடன் 42 வயதான தோனி, தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறக்கூடும் என்றபேச்சு உலா வருகிறது. எனினும் அவர், இதுவரை எதுவும் கூறவில்லை. இதற்கிடையே தோனி இன்னும் இரு ஆண்டுகள் வரை ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் தோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு தொழில்முறை கிரிக்கெட் விளையாடுவதில் எதிர்கொண்டு வரும் சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர், யூடியூப் சானல் ஒன்றில் பேசியதாவது:

கடினமான விஷயம் என்னவென்றால் ஆண்டு முழுவதும் நான் கிரிக்கெட் விளையாடுவது இல்லை. இதனால் நான் உடற்தகுதியுடன் இருக்க வேண்டியது அவசியம். ஐபிஎல் தொடருக்கு வரும்போது, இங்கு உடற்தகுதியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் இளம் வீரர்களுடன் போட்டியிட வேண்டியது உள்ளது. தொழில்முறை விளையாட்டு அவ்வளவு எளிதானது அல்ல. இங்கு வயதை பார்த்து எல்லாம் எந்த சலுகையும் கொடுக்க மாட்டார்கள்.

விளையாட விரும்பினால் மற்றவீரர்களைப் போன்று உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். ஆனால் வயது அந்த கருணையை கொடுக்காது. அதனால் உணவு பழக்க வழக்கங்கள், கொஞ்சம் பயிற்சி என சிலவிஷயங்கள் இதில் அடங்கியுள்ளன. சர்வதேச கிரிக்கெட்டில்இருந்து ஓய்வு பெற்றதும் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்பினேன். ஆனால், அதே நேரம் மனதளவில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்கான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். என்னை பொறுத்தவரையில் விவசாயம் செய்வதை விரும்புவேன், பைக்குகளை இயக்குவேன். பழைய ரக கார்களை சேகரித்துவைத்துள்ளேன். இதுபோன்ற விஷயங்கள் எனது மனஅழுத்தத்தை குறைக்கின்றன. எனக்கு மன அழுத்தம் இருந்தால், கார்கள் பழுதுபார்க்கும் (கேரேஜ்) இடத்துத்துச் செல்வேன், அங்கு இரண்டு மணி நேரம் செலவிடுவேன். இயல்பான பின்னர், அங்கிருந்து திரும்பி வருவேன். தலைமை பண்பை பொறுத்தவரையில் நீங்கள் கட்டளையிட்டோ அல்லது கேட்டோ மரியாதையை வாங்க முடியாது. அதை சம்பாதிக்க வேண்டும்.

உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் மதித்தால், அவர்கள் அதை 10 முதல் 15 சதவீதம் அதிகமாக திருப்பி கொடுப்பார்கள். சிஎஸ்கே உடனான எனது தொடர்புஒரு உணர்வுபூர்வமான இணைப்பு.அது ஒரு வீரர் வந்து 2 மாதங்கள் விளையாடி விட்டு சாதாரணமாக திரும்பி செல்வதைப் போன்றதுகிடையாது. அங்கே உணர்வுபூர்வமான இணைப்பு இருப்பது தான் எனது பலம்.

இவ்வாறு தோனி பேசியுள்ளார்.