2024ம் ஆண்டு நடைபெற உள்ள யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடருக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது. யூரோ கோப்பை கால்பந்து போட்டி தொடர் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான தகுதி சுற்றுப் போட்டிகள் ஐரோப்பிய கால்பந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது.
இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில் நடப்பு சாம்பியன் இத்தாலி மற்றும் கடந்த தொடரில் இரண்டாம் இடம் பிடித்த இங்கிலாந்து அணிகள் மோதின. விம்பிளே நகரில் நடைபெற்ற இந்த ஆட்டம், தொடக்கம் முதலே பரபரப்பாக இருந்தது. ஆட்டத்தின் 15வது நிமிடம் இத்தாலியின் கியான்லூகா கோல் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து, 32வது நிமிடம் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன், தனது அணிக்கான முதல் கோலை அடித்தார்.
போட்டியின் இரண்டாம் பாதியில் இங்கிலாந்து வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடினர். அந்த அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்கஸ் ராஷ்போர்டு 57வது நிமிடத்தில் கோல் அடித்தார். தொடர்ந்து 77வது நிமிடத்தில் ஹாரி கேன் அந்த அணியின் வெற்றிக்கான 3வது கோலை அடித்தார். ஆட்ட நேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 2024ம் ஆண்டு யூரோ கோப்பை தொடரில் விளையாட தகுதி பெற்றது. ஏற்கெனவே போர்சுக்கல், டென்மார்க் , ஹங்கேரி உள்ளிட்ட 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன.