பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டி20 போட்டியிலும் நியூஸிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 4-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மூன்றிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் 4வது டி20 போட்டி ஹேக்லி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் முகமது ரிஸ்வான் 90 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் மட்டும் எடுத்தது. நியூசிலாந்து அணி தரப்பில் மேட் ஹென்றி, லோகி பர்குசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தனர்.

இதையடுத்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூஸிலாந்து அணி களம் இறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஃபின் ஆலன் இந்த போட்டியில் 8 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். டிம் சீபர்ட் ரன் எதுவும் எடுக்காமலும், வில் யங் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இதன் பின்னர் கூட்டணி அமைத்த மிட்சல் மற்றும் பிலிப்ஸ் ஆகியோர் பாகிஸ்தான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இறுதிவரை இருவரும் ஆட்டமிழக்காமல், 44 பந்துகளில் மிட்சல் 72 ரன்களும், 52 பந்துகளில் பிலிப்ஸ் 70 ரன்களும் எடுத்து நியூசிலாந்து அணியை வெற்றி இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். இதனால் 18.1 ஓவர் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை நியூசிலாந்து வீழ்த்தியது. பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். பிற பந்துவீச்சாளர்களுக்கு விக்கெட் எதுவும் கிடைக்கவில்லை.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் நியூஸிலாந்து அணி 4-0 என்ற கணக்கில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 5வது மற்றும் இறுதிப் போட்டி வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டியிலாவது பாகிஸ்தான் அணி ஆறுதல் வெற்றி பெறுமா? அல்லது இந்த போட்டியிலும் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரை வொயிட்வாஷ் செய்யுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.