மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. கடந்த 17-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி அடிலெயிட் மைதானத்தில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்ஸில் 188 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து முதல் இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணி 283 ரன்கள் குவித்து 95 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி கடும் தடுமாற்றத்திற்கு இடையே 120 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை 3வது நாளில் துவக்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இந்த தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா அணி முன்னிலை பெற்றுள்ளது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக முதல் இன்னிங்ஸில் 119 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியா வீரர் ட்ராவிஸ் ஹெட் தேர்வு செய்யப்பட்டார். 2வது டெஸ்ட் போட்டி வருகிற 25-ம் தேதி பிரிஸ்பேன் மைதானத்தில் தொடங்க உள்ளது.
டி20 போட்டிகளில் அசத்தி வரும் மேற்கிந்திய தீவுகள் அணி, டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து சொதப்பி வருவது அந்நாட்டு ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.