இந்த வெற்றியை நிலநடுக்கத்தில் வாழ்வை இழந்த மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்! ஆப்கான் கிரிக்கெட் வீரர் உருக்கம்


ரஷீத் கான்

இங்கிலாந்து அணிக்கு எதிரான வெற்றியை ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தில் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு சமர்ப்பிப்பதாக ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி 69 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 284 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. 8 ஆண்டுகளுக்கு பிறகு, 14 தோல்விகளுக்கு பின் உலகக்கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான்

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய ரஷீத் கான் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டிக்கு பிறகு இந்த வெற்றி குறித்து பேசிய அவர், இது மிகப்பெரிய வெற்றி என்றும், இந்த ஆட்டம் தங்களுக்கு எந்த நாளிலும், எந்த அணிக்கு எதிராகவும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளதாக கூறினார். மேலும், இந்த வெற்றியை நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு, தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் 3,000 மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் அவர் கூறினார். இந்த வெற்றி கடினமான நேரத்தில் உள்ள அவர்களது முகத்தில் சிறிது மகிழ்ச்சியை கொண்டு வரும் என்றும் அவர் உருக்கமாக கூறினார்.

x