ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ்... முன்னணி வீராங்கனையை வீழ்த்திய 16 வயது மிர்ரா ஆண்ட்ரீவா!


மிர்ரா ஆண்ட்ரீவா

ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் 2வது சுற்று ஆட்டத்தில் உலகின் 6ம் நிலை வீராங்கனையான ஒன்ஸ் ஜபீரை, 16 வயது மிர்ரா ஆண்ட்ரீவா வீழ்த்தினார்.

மிர்ரா ஆண்ட்ரீவா

4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் கடந்த 14ம் தேதி மெல்பர்னில் தொடங்கியது. 128 போட்டியாளர்கள் கலந்துகொண்ட முதல் சுற்று போட்டிகள் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று மகளிர் பிரிவில் நடைபெற்ற போட்டியில் உலகின் 6ம் நிலையில் உள்ள, துனிஷியாவை சேர்ந்த ஒன்ஸ் ஜபீர் - ரஷ்யாவின் 16 வயதே ஆன மிர்ரா ஆண்ட்ரீவாவை எதிர்கொண்டார்.

ஓன்ஸ் ஜபீர், மிர்ரா ஆண்ட்ரீவா

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இருந்தே மிர்ராவின் கை ஓங்கியிருந்தது. முதல் செட்டை 6-0 என்ற கணக்கில் வென்ற மிர்ரா ஜபீருக்கு அதிர்ச்சியளித்தார். 2 வது செட்டையும் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதன் மூலம் 6-0, 6-2 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார்.

கடந்த 2022ம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் அறிமுகமான மிர்ரா, கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன், யுஎஸ் ஓபன் உள்ளிட்ட தொடர்களில் விளையாடி பரவலான கவனத்தைப் பெற்றார். தற்போது, முதல் முறையாக ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் விளையாடி வரும் அவர், ஜபீரை நேர் செட்களில் வீழ்த்தியுள்ளது பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

புகழ் குன்றா பொன்மனச் செம்மல் |எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் ஸ்பெஷல்!

x