தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய சர்ச்சை: டி20 உலகக் கோப்பை அணியில் ஒரு கருப்பின வீரருக்கே இடம்!


டி20 உலகக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணியில் ஒரேயொரு கருப்பின வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. ககிசோ ரபாடா மட்டுமே கருப்பின வீரராக இடம்பெற்றுள்ளார்.

இதனையடுத்து நிறவெறி கொடுமைகளின் இழப்புகளுக்கு எதிரான நேர்மறை இட ஒதுக்கீட்டு கொள்கை (affirmative action)க்கு எதிராக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி தேர்வு நடந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதனையடுத்து, முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஃபிகிலி மபாலுலா தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தை கடுமையாக சாடி பேசியுள்ளதில், “நிறவெறி கொடுமைகளில் இருந்து வெளிவந்து மாற்றங்கள் நடந்த பிறகும் ஒரேயொரு ஆப்பிரிக்க வீரருக்கே இடம்கொடுக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. விடுதலையினால் பெற்ற சாதகங்களை தலைகீழாக்குவது போல் தற்போதைய அணித் தேர்வு உள்ளது. அனைத்து தென் ஆப்பிரிக்கர்களுக்குமான நியாயமான பிரதிநிதித்துவம் இந்த அணியில் இல்லை" என்றுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் தென் ஆப்பிரிக்கா தலைவர் ரே மாலி பேசுகையில், “நிறைய சாதித்த பிறகும் அணித் தேர்வில் இன்று பின்னோக்கிச் சென்றுவிட்டோம். முற்போக்கை விட்டு பிற்போக்குக்கு சென்றுவிட்டொம். ஏன் அதிக கருப்பு வீரர்கள் இல்லை என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று சாடியுள்ளார்.