2வது டி20 போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி; 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வி


பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதை அடுத்து இன்று 2வது போட்டி ஹேமில்டன் நகரில் உள்ள செடான் பூங்கா மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியில், ஃபின் ஆலன், தேவன் கான்வே சிறப்பான துவக்கம் அளித்தனர். கான்வே 20 ரன்களிலும், கேப்டன் கேன் வில்லியம்சன் 26 ரன்களிலும், மிட்செல் சான்ட்னர் 25 ரன்களிலும் வெளியேறிய போதும், நிலைத்து நின்று விளையாடிய ஃபின் ஆலன், 5 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 74 ரன்கள் குவித்து அசத்தினார்.

ஆட்டநாயகனாக ஃபின் ஆலன் தேர்வு செய்யப்பட்டார்

இதையடுத்து 20 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களை குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பில் ஹாரிஸ் ராவுஃப் 3 விக்கெட்டுகளையும், அப்பாஸ் அஃப்ரிடி 2 விக்கெட்டுகளையும், அமீர் ஜமால், உசமா மிர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இதையடுத்து 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியுள்ளது. அதன் துவக்க ஆட்டக்காரர்கள் அயூப் ஒரு ரன்னிலும், ரிஸ்வான் 7 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.

தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை

இதைத்தொடர்ந்து பாபர் அசாம், பகர் சமான் ஆகியோர் இணை நிலைத்து நின்று ஆடி ரன்களை குவித்தது. பாபர் 66 ரன்களிலும், பகர் 50 ரன்கள் எடுத்தும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர், கேப்டன் ஷாஹீன்ன் அஃப்ரிடி மட்டும் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 19.3 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி 173 ரன்கள் மட்டும் எடுத்தது.

இதனால் நியூசிலாந்து அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்து வீசிய ஆடம் மில்னி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிம் செளத்தி, பென் சியர்ஸ், இந்தர்பிர் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஆட்ட நாயகனாக ஃபின் ஆலன் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து நியூசிலாந்து அணி இந்த தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

x