டி20 போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் மூன்றாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பாகிஸ்தான அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணியில், பின் ஆலன் 34 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 57 ரன்களும், தரில் மிட்செல் 61 ரன்களும் குவித்தனர். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.

இதனால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி 226 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் தரப்பில் ஷாகீன் அஃப்ரிடி, அப்பாஸ் அஃப்ரிடி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹாரிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
இதையடுத்து 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. அந்த அணியில் அனைத்து வீரர்களும் ஓரளவிற்கு ரன்கள் குவித்தனர். குறிப்பாக பாபர் அசாம், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 35 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உட்பட 57 ரன்களை குவித்து ஆட்டம் இழந்தார்.

பாகிஸ்தான் அணி 18 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் நியூசிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய டிம் செளதி 4 விக்கெட்டுகளையும், ஆடம், பென் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனிடையே பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், அரை சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில் 3வது அதிகபட்ச ரன்களை குவித்தவர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். 105 போட்டிகளில் விளையாடி உள்ள பாபர் அசாம் 3,588 ரன்கள் குவித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய வீரர் விராட் கோலி (4.008 ரன்கள் 115 போட்டிகள்) முதலிடத்திலும், ரோகித் சர்மா (3,853 ரன்கள் 148 போட்டிகள்) 2வது இடத்திலும் உள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
பொங்கல் கொண்டாட எல்.முருகன் வீட்டுக்கு வருகிறார் பிரதமர்!
'எனக்கு உடல்நிலை சரியில்லையா?': முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!