ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் கலந்துகொள்ள இந்திய வீரர் சுமித் நாகல் தகுதி பெற்றுள்ளார்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியா ஓபன் தொடர் வரும் 14-ம் தேதி மெல்பர்னில் தொடங்குகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 128 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இதில் 104 பேர் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றனர். அதேபோல், 16 பேர் தகுதிச்சுற்றின் மூலமும், 8 பேர் வைல்டு கார்டு சுற்று மூலமாகவும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த தொடருக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் கடந்த 8-ம் தேதி தொடங்கியது. இதில் இந்தியாவின் சுமித் நாகல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் கலந்துகொண்டார். கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தகுதிச் சுற்றுப்போட்டியில் அவர் பிரான்சின் ஜெஃப்ரி பிளாங்கனேக்ஸை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் எட்வர்ட் விண்டரை 6-3, 6-2 என்ற சேர் செட்களில் வீழ்த்தி, இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார். இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அவர் ஸ்லோவோக்கியாவின் அலெக்ஸ் மால்கனை எதிர்கொண்டார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அவர் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் விளையாடத் தகுதி பெற்றார். இதன் மூலம் அவர் ஆஸ்திரேலியா ஓபன் தொடரில் முதல் முறையாக அவர் விளையாட உள்ளார். சுமித் கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஓபன் தொடருக்குத் தகுதி பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.