முகமது ஷமி, வைஷாலி உள்பட 26 பேருக்கு அர்ஜுனா விருது... குடியரசு தலைவர் வழங்கினார்!


அர்ஜூனா விருது பெற்ற தமிழக செஸ் வீராங்கனை வைஷாலி.

விளையாட்டு துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் அர்ஜுனா விருது, கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, செஸ் போட்டியில் சாதனைப் படைத்த தமிழக வீராங்கனை வைஷாலி உள்ளிட்ட 26 பேருக்கு வழங்கப்பட்டது.

விளையாட்டுத் துறையில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் வீரர்கள், வீராங்கனைகளை கெளரவிக்கும் வகையில் மத்திய அரசு அர்ஜுனா விருது, கேல் ரத்னா விருது, துரோணாச்சாரியா விருது, வாழ்நாள் சாதனையாளருக்கான மேஜர் தயான் சந்த் விருது ஆகியவற்றை வழங்கி வருகிறது.

அதன்படி, 20230-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு ஓஜாஸ் பிரவீன் தியோடாலே (வில்வித்தை), அதிதி கோபிசந்த் சுவாமி (வில்வித்தை), எம்.ஸ்ரீசங்கர் (தடகளம்), பருல் சவுத்ரி (தடகளம்), முகமது ஹுசாமுதீன் (குத்துச்சண்டை), ஆர்.வைஷாலி (செஸ்), முகமது ஷமி (கிரிக்கெட்), அனுஷ் அகர்வாலா (குதிரையேற்றம்), திவ்யக்ரிதி சிங் ( குதிரையேற்ற உடை),
தீக்ஷா தாகர் (கோல்ஃப்), கிருஷன் பகதூர் பதக் (ஹாக்கி), புக்ரம்பம் சுஷிலா சானு (ஹாக்கி), பவன்குமார் (கபடி), ரிது நேகி (கபடி), நஸ்ரின் (கோ-கோ), பிங்கி (உருட்டு பந்து), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் (துப்பாக்கிச்சுடுதல்), இஷா சிங் (துப்பாக்கிசுடுதல்), ஹரிந்தர் பால் சிங் சந்து (ஸ்குவாஷ்), அயிகா முகர்ஜி (டேபிள் டென்னிஸ்), சுனில் குமார் (மல்யுத்தம்), ஆன்டிம் (மல்யுத்தம்), நவோரெம் ரோஷிபினா தேவி (உஷு), சீத்தல் தேவி (பாரா வில்வித்தை), இல்லூரி அஜய் குமார் ரெட்டி (பார்வையற்றோர் கிரிக்கெட்), ப்ராச்சி யாதவ் (பாரா கேனோயிங்) ஆகிய 26 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் செஸ் வீராங்கனை ஆர்.வைஷாலி தமிழகத்தை சேர்ந்தவர் ஆவார்.

அர்ஜுனா விருது பெறும் சீத்தல் தேவி (பாரா வில்வித்தை).

இதேபோல், துரோணாச்சாரியார் விருதுக்கு ஐந்து பேரும், வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் 3 பேரும், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு 3 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் இன்று குடியரசு தலைவர் திரெளபதி முர்மு விருதுகளை வழங்கினார்.

அதன்படி, இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடியதற்கு இவரது பெயரை அர்ஜுனா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் அந்தந்த பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன.

இதையும் வாசிக்கலாமே...

x