இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் இணைந்து கபி கபி பாடலைப் பாடி அசத்திய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் மக்காயா நிடினியின் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. டெஸ்ட் மற்றும் டி20 தொடர்கள் சமனில் முடிவடைந்தன. பரபரப்பாக முடிவடைந்த டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி ஒன்றரை நாளில் முடிவடைந்தது. இதனால், இந்த போட்டி பெரும் சர்ச்சைக்கும் உள்ளானது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன், யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் கிரிக்கெட், சினிமா என பல விஷயங்கள் குறித்து பேசுவதோடு, பேட்டிகளையும் எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், நடைபெற்று முடிந்த கேப்டவுன் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் இந்த போட்டி குறித்து அஸ்வின் பேசி வீடியோ ஒன்றை எடுத்தார். அந்த வீடியோவின் இடையில், அவர் முன்னாள் தென்னாப்பிரிக்கா மற்றும் சிஎஸ்கே வீரர் மக்காயா நிடினியுடன் பேசினார்.
அப்போது, போட்டி குறித்த கேள்விக்குப் பிறகு, சென்னை ரசிகர்களுக்கு எதையாவது கூறுங்கள் என அஸ்வின் கேட்கிறார்.
அதைத்தொடர்ந்து, கவுண்டமணி, மணிவண்ணன் காமெடி காட்சியில் இடம்பெறும் 'கபி கபி மேரா தில்லுமே' என்ற இந்திப் பாடலை அதே பாணியில் நிடினி பாடி அசத்தினார். இந்த காட்சிகளை அஸ்வின் பகிர, அது தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
சபரிமலையில் தமிழக பக்தர்கள் மீது கொடூர தாக்குதல்... கேரள போலீஸ் அடாவடி