[X] Close

அணி வீரர்கள் தேர்வில் தவறு செய்ததால் படுதோல்வி: கேப்டன் விராட் கோலி ஒப்புதல்


indian-captain-kohli-speech-after-loss-at-lords-test-match

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 14 Aug, 2018 09:58 am
  • அ+ அ-

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மிகவும் அபாரமாகவும், துல்லியமாகவும் பந்துகளை வீசினர். பந்துகள் நகர்வதை எங்களால் கணிக்க முடியவில்லை. மேலும் இங்கு நிலவும் வானிலையும் கணிக்க முடியாத நிலையில் உள்ளது. அவர்களின் துல்லியமான பந்துவீச்சால் நாங்கள் வீழ்ந்தோம்.அணி வீரர்கள் தேர்வில் தவறு செய்ததால் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் தோல்வி கண்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறினார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.

இந்தப் போட்டி 4-ம் நாள் ஆட்டத்திலேயே முடிவுக்கு வந்தது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 107 ரன்களுக்குச் சுருண்டது. இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 4-ம் நாள் உணவு இடைவேளைக்கு முன்னதாக 7 விக்கெட்கள் இழப்புக்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் முதல் இன்னிங்ஸில் 289 ரன்கள் முன்னிலை பெற்றது இங்கிலாந்து அணி.

இந்த நிலையில் 4-ம் நாள் ஆட்டத்தின்போது 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி மளமளவென விக்கெட்களை இழந்து தோல்வி கண்டது. 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து இந்திய அணி ஒரு இன்னிங்ஸ், 159 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியைச் சந்தித்தது.

2-வது இன்னிங்ஸின்போது முரளி விஜய் 0, ராகுல் 8, புஜாரா 17, ரஹானே 13, தினேஷ் கார்த்திக் 0, கேப்டன் கோலி 17, குல்தீப் யாதவ் 0, இஷாந்த் சர்மா 2, முகமது ஷமி 0, ஹர்திக் பாண்டியா 26 ரன்கள் எடுத்தனர். அஸ்வின் ஆட்டமிழக்காமல் 33 ரன்கள் எடுத்தார்.

இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர் சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 4 விக்கெட்களும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதையடுத்து 5 டெஸ்ட் போட்டி கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார். இவ்விரு அணி களிடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங் காமில் ஆகஸ்ட் 18-ம் தேதி தொடங்கவுள்ளது.

போட்டியில் தோல்வி கண்டது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது:

முதல் டெஸ்டைத் தொடர்ந்து 2-வது டெஸ்ட் போட்டியிலும் தோல்வி கண்டது வருத்தம் அளிக்கிறது. நாங்கள் எங்கள் முழுத் திறனையும் வெளிப்படுத்தி விளையாட வில்லை. கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் முதல் முறையாக நாங்கள் மோசமாக விளையாடியுள்ளோம். இங்கிலாந்து அணி வீரர்கள் மிகவும் திறமையாக விளையாடி வெற்றி கண்டனர். அவர்கள் வெற்றி அணியாக இருக்கத் தகுதி படைத்தவர்கள். நாங்கள் தோல்வியடையும் நிலையில் இருந்தோம். தோல்வி கண்டோம்.

இங்கிலாந்தில் நிலவும் தட்பவெப்பநிலை யால் அந்த அணி வெற்றி பெற்றதாகக் கருதமுடியாது. இங்குள்ள சூழ்நிலை சில சமயம் வெளிநாட்டு அணிக்கும் உதவும் என்பதை நாம் மறுக்க முடியாது.

இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் மிகவும் அபாரமாகவும், துல்லியமாகவும் பந்துகளை வீசினர். பந்துகள் நகர்வதை எங்களால் கணிக்க முடியவில்லை. மேலும் இங்கு நிலவும் வானிலையும் கணிக்க முடியாத நிலையில் உள்ளது. அவர்களின் துல்லியமான பந்துவீச்சால் நாங்கள் வீழ்ந்தோம். அணி வீரர்கள் தேர்வில் தவறு செய்ததால் நாங்கள் தோல்வி கண்டோம் என்று நினைக்கிறேன்.

அடுத்த போட்டியில் கூடுதலாக ஒரு வேகப் பந்துவீச்சாளரை சேர்ப்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். எனக்கு ஏற்பட்டுள்ள முதுகுவலி அடிக்கடி வருவதுதான். அதிக அளவிலான போட்டிகளில் விளையாடுவதால் இதுபோன்ற பிரச்சினை ஏற்படுகிறது. இது அடிக்கடி வரும். போகும். அதுபற்றி கவலைப்படத் தேவை யில்லை. அடுத்த டெஸ்ட் போட்டிக்குள் நான் தயாராகிவிடுவேன். இவ்வாறு அவர் கூறினார்.

வெற்றி குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது:

எங்களது பந்துவீச்சாளர்கள் மிகவும் திறமையாக பந்துவீசினர். அணியின் வெற்றி முழுமையும் அவர்களுக்கே சென்று சேரும். ஆனால் பேட்டிங்கில் இன்னும் நாங்கள் மெருகேற வேண்டியுள்ளது.

இந்தப் போட்டியில் பேர்ஸ்டோவும், கிறிஸ் வோக்ஸும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர். குறிப்பாக வோக்ஸின் பேட்டிங் அசத்தலாக இருந்தது.

நாங்கள் தற்போது நல்ல நிலையில் உள்ளோம். அடுத்து வரும் போட்டிகளையும் வெல்லும் முனைப்பில் தயாராகி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிடிஐ

வாக்களிக்கலாம் வாங்க

'லிசா உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close