அடுத்தடுத்து இரண்டு பதக்க வாய்ப்புகளை இழந்தது இந்தியா - பாரிஸ் ஒலிம்பிக்கில் அதிர்ச்சி


பாரிஸ்: ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் லக்‌ஷயா சென் தோல்வியடைந்தார். அதேபோல துப்பாக்கிச் சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவிலும் இந்தியா வெண்கலத்தை இழந்தது.

இன்று நடைபெற்ற ஒலிம்பிக் பாட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் தொடக்கம் முதலே லக்‌ஷயா சென் முன்னிலையில் இருந்தார். அதன் பலனாக முதல் செட்டை 21-13 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து இரண்டாவது செட்டில் முதல் சில நிமிடங்கள் 2-2 என ஆட்டம் சமனில் இருந்தது.

அதன் பின்னர் லக்‌ஷயா சென் முன்னிலை பெற தொடங்கினார். இருப்பினும் ஒருகட்டத்தில் 8-8 என்று கணக்கில் சமன் செய்தார் மலேசியாவின் லீ ஸி ஜியா. அதன் பின்னர் அவர் ஆட்டத்தில் முன்னிலை பெற்றார். 8-12 என பின்தங்கிய நிலையில் இருந்து 12-12 என வரிசையாக நான்கு புள்ளிகள் எடுத்து சமன் செய்தார் லக்‌ஷயா. இரண்டாவது செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் சவால் அளித்தனர். இறுதியில் 21-16 என லீ ஸி ஜியா இரண்டாவது செட்டை வென்றார்.

வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டில் 2-9 என பின்தங்கி இருந்தார் லக்‌ஷயா சென். பின்னர் 6-11 என ஆட்டம் நகர்ந்தது. இறுதியில் 11-21 என அந்த செட்டை இழந்தார். எனவே இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்டை வென்ற லீ ஸி ஜியா, வெண்கல பதக்கம் வென்றார். இதில் 1-2 என்ற செட் கணக்கில் லக்‌ஷயா சென் தோல்வியை தழுவினார்.

அதேபோல துப்பாக்கி சுடுதல் ஸ்கீட் கலப்பு இரட்டையர் பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை இந்திய அணி நூலிழையில் இழந்தது. சீன ஜோடி 44-43 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது. வெறும் ஒரு புள்ளியில் வெற்றியை தவற விட்டது இந்தியா.

சீனாவுக்கு எதிராக நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான இந்தப் போட்டியில் மகேஸ்வரி சவுஹான் மற்றும் அனந்த்ஜீத் சிங் அணி துவக்கம் முதலே சிறப்பாக புள்ளிகளை பெற்று வந்தது. ஆனால், கடைசி இரண்டு சுற்றுகள் மீதமிருந்த நிலையில் சீனா 28 - 27 என்ற புள்ளிக் கணக்கில் இந்தியாவை விட முன்னிலையில் இருந்தது.

கடைசி இரண்டு சுற்றுகளிலும் இந்தியா ஒரு புள்ளி பின்தங்கிய நிலையிலேயே இருந்தது. முடிவில் சீனா 44 - 43 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இதனால் இந்திய அணி பதக்கத்தை தவறவிட்டது. இன்று பதக்கம் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட இரண்டு போட்டிகளில் இந்திய வீரர்கள் நூலிழையில் தோல்வியை தழுவியது இந்தியாவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

x