திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்க மாணவிகள் விடுதியில் தங்கி பயிற்சி பெற்று, தேசிய மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் 360 வீராங்கனைகள் பங்கேற்று, பல்வேறு பதங்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தடகளம், கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டிற்கான மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் மாநிலம் முழுவதிலும் இருந்து பல்வேறு மாணவிகள் மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வு போட்டிகளில் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்டு விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். விடுதியில் தற்போது 68 மாணவிகள் பயின்று வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்க விடுதியில் இதுவரை தங்கிப்பயின்ற மாணவிகளில், தேசிய அளவில் தடகள போட்டியில் 17 வீராங்கனைகளும், கால்பந்து போட்டியில் 6 வீராங்கனைகளும் என மொத்தம் 23 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இதில் தடகளத்தில் 2 வெள்ளிப் பதக்கமும், கால்பந்து போட்டியில் ஒரு வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளனர். அதேபோல், மாநில அளவிலான போட்டிகளில் தடகளத்தில் 199 வீராங்கனைகளும், கூடைப்பந்து போட்டியில் 66 வீராங்கனைகளும், கால்பந்து போட்டியில் 72 வீராங்கனைகளும் என மொத்தம் 337 வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அதில் தடகளத்தில் 74 வீராங்கனைகளும், கூடைப்பந்து போட்டியில் 18 வீராங்கனைகளும், கால்பந்து போட்டியில் 18 வீராங்கனைகளும் என மொத்தம் 110 வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளனர்.
ஆகமொத்தம் 360 வீராங்கனைகள் தேசிய மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் தடகளத்தில் 180 வீராங்கனைகளும், கூடைப்பந்து போட்டியில் 48 வீராங்கனைகளும், கால்பந்து போட்டியில் 85 வீராங்கனைகளும், என மொத்தம் 313 வீராங்கனைகள் மாவட்ட அளவில் பதக்கம் பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் செப்டம்பர் மாத்தில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. அதற்கான இணையவழி பதிவுகள் விரைவில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றது.
பொதுப்பிரிவு கபாடி போட்டியில் திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கலந்து கொண்ட பெண்கள் அணி தங்கப் பதக்கம் பெற்று பரிசு தொகை தலா ரூ.50,000 வீதம் என மொத்தம் ரூ.6.00 இலட்சம் பெற்றனர். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான எறிப்பந்து போட்டியில் நிலக்கோட்டை லில்லியன் சிறப்பு பள்ளி பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் பெற்று பரிசு தொகை தலா ரூ.37,500 வீதம் ரூ.2,62,500 பெற்று சாதனை படைத்துள்ளனர்.
::::