“ஆர்சிபி என் மகனை வாங்கிய போது ட்ரோல் செய்தனர்” - நினைவு கூர்ந்த யாஷ் தயாளின் தந்தை


யாஷ் தயாள்

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முக்கியக் காரணம் அந்த அணியின் பவுலர் யாஷ் தயாள் வீசிய கடைசி ஓவர் தான். இந்த சூழலில் கடந்த ஆண்டு ஏலத்தில் அவரை ஆர்சிபி வாங்கிய போது பலரும் அதனை ட்ரோல் செய்ததாக யாஷ் தயாளின் தந்தை சந்தர்பால் தெரிவித்துள்ளார்.

“நான் அங்கம் வகித்த வாட்ஸ்-அப் குழு ஒன்றில் ஒரு மீம் பகிரப்பட்டு இருந்தது. அதை எனக்கு தெரிந்த நபர் ஒருவர் பகிர்ந்திருந்தார். ‘பிரயக்ராஜ் எக்ஸ்பிரஸின் பயணம் தொடங்குவதற்கு முன்பே முடிந்துவிட்டது’ என சொல்லி எனது மகன் படத்தை அதில் வைத்திருந்தனர்.

அது தொடர்ந்து நீடிக்க, எங்கள் குடும்பத்தினர் அனைவரும், நாங்கள் அங்கம் வகித்த பெரும்பாலான வாட்ஸ்-அப் குழுக்களில் இருந்து வெளியேறினோம். எங்கள் குடும்பத்துக்கு என்று மட்டும் ஒரு குழு இருந்தது. ஐந்து கோடி ரூபாய்க்கு எனது மகனை ஆர்சிபி வாங்கி இருந்தது. அந்த பணத்தை ஆர்சிபி வாய்க்காலில் போட்டு விட்டதாகவும் ட்ரோல் செய்திருந்தனர். நாம் சமூக வலைதளத்தில் இருந்து ஒதுங்கி இருந்தாலும் இந்த வகையான ட்ரோல்களை தவிர்க்க முடியவில்லை” என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கடந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக யாஷ் தயாள் ஆடி இருந்தார். அப்போது கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை அவரது ஓவரில் விளாசினார் ரிங்கு சிங். இந்த நிலையில் நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்காக சிஎஸ்கே உடனான முக்கியமான போட்டியில் கடைசி ஓவரை வீசி, தோனியின் விக்கெட்டை வீழ்த்தினார். அந்த ஓவரில் 6, விக்கெட், 0, 1, 0, 0 என மொத்தம் 7 ரன்களை மட்டுமே கொடுத்திருந்தார். அதன் மூலமாக ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

26 வயதான யாஷ் தயாள், உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். உள்ளூர் கிரிக்கெட்டில் அந்த அணிக்காக விளையாடி வருகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான யாஷ் நடப்பு சீசனில் ஆர்சிபி அணிக்காக 13 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.