[X] Close

'தோனியைப் பற்றி கவலைப்படாதீர்கள், சரியான நேரத்தில் எழுவார்': சந்தீப் பாட்டீல் ஆதரவு


  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 17:08 pm
  • அ+ அ-

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம், சரியான நேரத்தில் அவர் எழுவார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர்  சந்தீப் பாட்டீல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக் கோப்பையை கபில் தேவ் தலைமையில் வென்றபோது, சந்தீப் பாட்டீல் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைப் போட்டியின் இந்திய அணி வீரர் தோனியின் பேட்டிங் தற்போது சர்ச்சையாகியுள்ளது. பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்த தோனி, இதுவரை இந்திய அணி 4 லீக் ஆட்டங்களில் ஆடியுள்ள நிலையில் ஒருபோட்டியலும் சிறப்பாக ஸ்கோர் செய்யவில்லை. 4 போட்டிகளில் இதுவரை தோனி 90 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார்.

kolhi.jpg 

அதிலும் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் மந்தமான பேட்டிங் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. 58 பந்துகளைச் சந்தித்த தோனி, 28 ரன்கள் சேர்த்து ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். 100 ஸ்டெம்பிங்களுக்கு மேல் செய்து மற்ற பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்த தோனி, ஒருமுறை மட்டுமே ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தநிலையில், 2-வது முறையாக ஸ்டெம்பிங்கில்  ஆட்டமிழந்தார்.

தோனி, கேதார் ஜாதவ் பேட்டிங் குறித்து கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்திருந்தார். தோனி போன்ற மூத்த வீரர் இளம் வீரரக்கு ஸ்ட்ரைக்கை வழங்கி ரன்குவிப்பை வலுப்படுத்தவேண்டும் என்றும், தோனி, ஜாதவ் ஆட்டம் திருப்தி அளிக்கவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

இதற்கு சச்சின் ரசிகர்களும், தோனியின் ரசிகர்களும் சமூக வலைதங்களில் ஒருவருக்கொருவர் கடுமையாக மோதிக்கொண்டனர்.

sandeep.jpg 

இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சந்தீப் பாட்டீல் தோனியின் பேட்டிங் திறமை குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் இணையதளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியுள்ளதாவது:

உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்யும் முன், இந்திய அணியில் முக்கியமானவர் யார் என என்னைக் கேட்டிருந்தால், அது தோனி என்று கூறியிருப்பேன். தோனியின் பேட்டிங் ஃபார்ம் குறித்து பலரும் சந்தேகம் எழுப்புகிறார்கள். என்னைப் பொருத்தவரை சற்று பொறுமையாக இருங்கள், அதன்பின் பாருங்கள் என்பதுதான் என்னுடைய பதில்.

தோனியை உங்களுக்கு பிடிக்கும் என்பதால், அவருக்கு ஆதரவு தருகிறார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆம், எனக்கு தோனியை தனிப்பட்ட முறையில் மிகவும் பிடிக்கும். தோனியின் பேட்டிங் திறமை மீது அவரைப் பிடிக்கும் அளவைக் காட்டிலும் நம்பிக்கை வைத்திருக்கிறேன்.

kuldeep.jpg 

தோனி சாதாரண வீரராக மட்டும் அணியில் இல்லை. கேப்டன் விராட் கோலிக்கும், பந்துவீச்சாளர்களுக்கும் முக்கியமான, அழுத்தம் மிகுந்த நேரங்களில் ஆலோசனைகளை வழங்குவது, பீல்டிங் அமைப்பை மாற்றுவது என பல்வேறு வெற்றிக்கான விஷயங்களில் ஈடுபடுகிறார். தோனியின் பேட்டிங் திறமையை வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும எவ்வாறு இருந்திருக்கிறது, எந்த அளவுக்கு பங்களிப்பு செய்துள்ளார் என்பதை அவரின் ரசிகர்கள் அறிவார்கள்.

தோனியும், ஜாதவும் சேர்ந்து மந்தமாக ஆடினார்கள் என்ற குற்றசாட்டு வைக்கப்படுகிறது. ஆனால், அன்று ஆடுகளம் எவ்வாறு இருந்தது, முக்கியமான கட்டத்தில் கோலி விக்கெட் உள்ளிட்ட 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியதை மறந்துவிடக்கூடாது.  தோனியும், ஜாதவும் பேட்டிங்கில் முதிர்ச்சியற்று இருந்தார்கள் என்றாலும், அந்த சூழலை உணர்ந்து இருவரும் பொறுப்புணர்வுடன் பேட் செய்தார்கள். ஆப்கானிஸ்தான் வீரர்கள் அளித்த நெருக்கடியை உணர்ந்து சமாளித்து பேட் செய்தார்கள்.

ஒரு தொடரை வெல்ல வேண்டுமானால், ஒரு அணி சரியான நேரத்தில் உச்சத்தை அடைய வேண்டும், அந்த வகையில் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி சரியான திசையில்தான் செல்கிறது. அரையிறுதிக்கு தகுதிபெறக்கூடிய நிலைக்கு வந்துவிட்டது.

குல்தீப், சாஹல், பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தங்களின் இக்கட்டான நேரத்தில் தோனியிடம்தான் ஆலோசனை பெறுகிறார்கள், அதன்படி செயல்படும்போது, நல்ல முடிவும் கிடைக்கிறது. ஷமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்தது நினைவில்லையா.

mohammed-shami-and-ms-dhoni.jpg 

கேப்டன், துணைக் கேப்டன் எப்போதெல்லாம் நெருக்கடியிலும், அழுத்ததிலும் சிக்கும்போதெல்லாம் தோனி ஆலோசனை வழங்கி அணியின் வெற்றிக்கு துணை செய்கிறார்.

ஐபிஎல் போட்டியில் சிறப்பாக பேட் செய்தவர் தோனி, பயிற்சி ஆட்டத்தில் சதம் அடித்து திறமையை நிரூபித்துள்ளார். ஆதலால், தோனியின் திறமை குறித்து மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. தோனி ஒருபோதும் பின்னடைவைச் சந்திக்கமாட்டார், இந்திய அணியையும், ரசிகர்களையும் பின்னடைவை சந்திக்கவிடமாட்டார். கவலைப்படாதீர்கள், சரியான நேரத்தில் தோனி எழுவார். இந்த உலகக் கோப்பையை தோனி அவரின் வாழ்க்கையில் உச்சத்தில்தான் முடிப்பார் நம்புங்கள்.

இவ்வாறு சந்தீப்பாட்டீல் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close