[X] Close

இந்திய அணியையும் எங்களால் வெல்ல முடியும்: சவால் விட்ட சகிப் அல் ஹசன்


  • kamadenu
  • Posted: 25 Jun, 2019 11:43 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

இந்திய அணியையும் எங்களால் வெல்ல முடியும். அதற்கான தகுதிகள் இருக்கின்றன. ஆனால், முழுத்திறமையையும் வெளிப்படுத்தி விளையாடுவது அவசியம் என்று வங்கதேசத்தின் ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன் சவால் விடுத்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளை வீழ்த்தி, 7 போட்டிகளில் 7 புள்ளிகளுடன் வங்கதேசம் 5-வது இடத்தில் இருக்கிறது.

சவுத்தாம்டனில் நேற்று நடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 62 ரன்களில் வங்கதேசம் அணி வெற்றி பெற்றது. வலிமை வாய்ந்த தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்கள். மே.இ.தீவுகள் அணி 300 ரன்களுக்கு மேல் சேர்த்ததையும் சேஸிங் செய்து வங்கதேசம் திரும்பிப் பார்க்க வைத்தது.

இந்நிலையில், வங்கதேச அணிக்கு அடுத்துவரும் 2 ஆட்டங்களும் மிக முக்கியமானவை. இந்தியாவுடன் ஜூலை 2-ம் தேதியும், பாகிஸ்தானுடன் ஜூலை 5-ம் தேதியும் மோதுகிறது. இந்த இரு போட்டிகளையும் வென்றால் மட்டும் அரையிறுதி குறித்த வாய்ப்புகள் உறுதியாகும்.

இந்நிலையில், உலகக்கோப்பை போட்டியில் ரன்கள் சேர்ப்பில் முன்னிலை வீரராக இருந்து வரும் வங்கதேச ஆல்ரவுண்டர் சகிப் அல் ஹசன் நேற்றைய ஆட்டத்தில் அரை சதமும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.

sahkib.jpg 

இந்த வெற்றிக்குப் பின், சகிப் அல் ஹசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:

''இந்திய அணி வலிமையானது. இதுவரை தோல்வி அடையாமல் புள்ளிகள் வரிசையில் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆனால், உலகக்கோப்பையை வெல்வதற்கு சிலருக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டாலும், இது அந்த அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நாங்கள் எங்களின் சிறந்த பங்களிப்பை அளிப்போம்.

எங்களின் அனுபவம் நிச்சயம் உதவும். எங்களால் இந்தியாவை எளிதாக வெல்ல முடியாது என்பது தெரியும். ஆனால், இந்திய அணியை வீழ்த்தும் அளவுக்கு வெல்லும் அளவுக்கு திறமை இருக்கிறது, வீழ்த்த முடியும் என நம்புகிறோம்.

இந்திய அணியில் உலகத் தரம் வாய்ந்த சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள் என்பதை அறிவோம். எங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பாக விளையாடுவோம்''.

இவ்வாறு சகிப் அல் ஹசன் தெரிவித்தார்.

வங்கதேச அணிக்கு சுழற்பந்துவீச்சுப் பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் ஜோஷி செயல்பட்டு வருகிறார். கடந்த 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 15 டெஸ்ட், 69 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் கூறுகையில், "இந்திய அணிக்கு எதிராக எங்களின் சிறந்த பங்களிப்பை அளிப்போம். எங்களின் சுழற்பந்துவீச்சு சிறந்தது என்று எங்களுக்குத் தெரியும். ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்து வீசியுள்ளோம். மேற்கிந்தியத் தீவுகள் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறோம். அயர்லாந்தை வீழ்த்தியுள்ளோம், இந்திய அணியை இதற்கு முன் 3 முறை தோற்கடித்துள்ளோம்.

லிட்டன் தாஸ், முஷ்பிகுர் ரஹிம், சவுமியா சர்க்கார், தமிம் இக்பால், மஷ்ரபி மோர்தசா ஆகிய வீரர்கள் எங்களுக்கே உரிய ஸ்டைலில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள்.

இந்தியாவை சுழற்பந்துவீச்சு மூலம் ஆப்கானிஸ்தான் அணி கட்டுப்படுத்தியதுபோல், நாங்களும் கட்டுப்படுத்துவோம். இந்திய அணியிடம் இருப்பதைப் போலவே, எங்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். நாங்கள் எவ்வாறு இந்திய அணியை எதிர்கொள்வோம், பந்துவீச்சை எதிர்கொள்வோம் எனும் கேள்வி இந்திய அணிக்கும் பொருந்தும்" என சுனில் ஜோஷி தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close