[X] Close

ஆப்கான் கிரிக்கெட்டை உலக அளவில் பிரசித்தி பெறச் செய்த பிரதிநிதி ரஷீத் கான்: மோர்கனால் மனப் பலத்துக்கு விழுந்த அடி


  • kamadenu
  • Posted: 19 Jun, 2019 17:04 pm
  • அ+ அ-

-இரா.முத்துக்குமார்

ஆப்கான் கிரிக்கெட் பெரும்பாலும் முகாம்களில் வளர்ந்து சர்வதேச அளவுக்கு உயர்ந்தது. தகுதிச் சுற்றுப் போட்டிகளில் ஜிம்பாப்வே, அயர்லாந்து போன்ற அணிகளையும் பின்னுக்குத் தள்ளி மே.இ.தீவுகளுக்கு டஃப் ஃபைட் கொடுத்து உலகக்கோப்பைக்குத் தகுதி பெற்றது.

 

அந்த அணி உலகம் முழுதும் பிரபலமானதில் ரஷீத் கானுக்கு முதலிடம், அதன் பிறகு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ஷஸாத் ஆகியோர்களாவார்கள். குறிப்பாக ரஷீத் கான் டி20 லீகுகளில் உலகம் முழுதும் பெரிய ஹிட்டர்களால் கூட எளிதில் அடிக்க முடியாத ஒரு பவுலராகத் திகழ்ந்தார்.

 

இந்த உலகக்கோப்பையில் ரஷீத் கானை முன் வைத்துத் தான் ஆப்கான் அணியின் வாய்ப்புகள் பற்றி குறைவாகவேனும் பேசப்பட்டு வந்தது. இந்த உலகக்கோப்பைக்கு அதிக விக்கெட்டுகள் எடுத்த 2வது பவுலர் என்ற தரநிலையில் அடியெடுத்து வைத்தார். ஆனால் இந்த எண்ணிக்கைகள் பெரும்பாலும் அயர்லாந்து, ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரானது என்பதை பலரும் அறிவார்கள்.

 

ஆனால் எண்ணிக்கையையும் கடந்து ரஷீத் கானின் பந்துகளின் தினுசுகள் பெரிய ஆச்சரியம், அவரது பிளைட், வேகத்தில் செய்யும் சூட்சம மாற்றங்கள், பந்து காற்றில் வரும் திசையும் பிறகு பிட்ச் ஆன பிறகு செல்லும் திசையும், பிளைட், ட்ரிஃப்ட், கூக்ளி, நேர் பந்துகள், என்று உலகின் தலை சிறந்த பேட்ஸ்மென்களையும் அச்சுறுத்தக்கூடியது என்பது நிபுணர்கள் கருத்தாகும்.

 

நேற்றைய ஆட்டத்தின் 35வது ஓவரில் 199/2 என்று இருந்தது இங்கிலாந்து. இயன் மோர்கன் 24 பந்துகளில் 26 ரன்கள் என்று இருந்தார் ஆனால் அடியைத் தவிர வேறொன்றறியேன் பராபரமே என்ற அவரது நோக்கத்தில் தெளிவாக இருந்தார் மோர்கன். ஆனால் 28 ரன்களில் அவர் இருந்த போது ரஷீத் கானின் அருமையான கூக்ளியை ஸ்லாக் ஸ்வீப் செய்யும் போது சரியாகச் சிக்கவில்லை. டீப் மிட்விக்கெட்டுக்குப் பந்து சென்ற போது அங்கு பீல்டர் தவலத் ஸத்ரான் சரியானன் இடத்தில் இல்லாமல் சற்று முன்னால் இருந்தார். அவர் கையில் பட்டு பந்து பவுண்டரியானது. கேட்ச் கோட்டை விடப்பட்டது, ரஷீத்கானின் இதயம் நொறுங்குமாறு அடுத்த பந்து மிகப்பெரிய சிக்ஸ். இதுதான் ரஷீத் கானை மோர்கன் அடித்த 7 சிக்சர்களின் முதல் சிக்ஸ்.

morgan.jpg 

கடைசி 15 ஓவர்களில் 198 ரன்கள் இதில் ரஷீத் கான் மட்டும் கொடுத்த ரன்கள் 74.  ஆப்கான் கிரிக்கெட்டின் லட்சியக் குறியீடான ரஷீத் கானின் பிம்பம் சிதைந்தது. 110 ரன்களைக் கொடுத்து எதிர்மறைச் சாதனைக்குரியவரானார்.

 

தொடக்கத்திலேயே ஜோ ரூட், பேர்ஸ்டோ அவரை செட்டில் ஆக விடவில்லை, ரஷீத் கானும் லைன் லெந்தில் கோட்டை விட்டார், ஷார்ட் பிட்ச் அல்லது வாகாக அடிக்க ஃபுல் லெந்த் என்று அவர் பந்து வீச்சு அவர் போலவே இல்லை.

 

இதில் கிரிக் இன்போ அளிக்கும் இன்னொரு சுவாரசியமான புள்ளி விவரம் என்னவெனில் இந்த உலகக்கோப்பையில் விளையாடும் மற்ற 9 அணிகளுக்கு எதிராக ரஷீத் கான் 683 பந்துகளை வீசியுள்ளார் அதில் 4 சிக்சர்களை மட்டும்தான் கொடுத்துள்ளார். சராசரி 13.79, சிக்கனவிகிதம் ஓவருக்கு 3.51தான்.

 

அன்றைக்கு இயன் மோர்கன் வேறு ஒரு மூடில் இருந்தார் என்று ரஷீத் கான் அடுத்த போட்டியிலும் இன்னும் கொஞ்சம் வேறு உத்திகளையும் கற்றுக் கொண்டு ஒரு பழிதீர்க்கும் மனோபாவத்துடன் அவர் மீண்டு எழ வேண்டுமென்பதே ரசிகர்களது விருப்பமாக உள்ளது.

 

எவ்வளவோ பவுலர்களுக்கு இப்படி நடந்துள்ளது, இந்தியாவில் பராஸ் மாம்ப்ரே., சச்சின் டெண்டுல்கரிடம் சரியான அடி வாங்கி உள்நாட்டு கிரிக்கெட் வாழ்வே சரிவு கண்டது. சர்வதேச மட்டத்தில் ஹென்றி ஒலாங்காவும் இப்படித்தான் சச்சின் டெண்டுல்கரின் அடியால் கொஞ்சம் ஆடித்தான் போனார், மனத்தளர்ச்சியுற்றார். ஷேன் வார்ன் சொல்லி சொல்லி எடுத்த தென் ஆப்பிரிக்க வீரர் டேரில் கலினனும் அதன் பிறகு பேட்டிங் தடுமாற்றம் பின்னடைவு கண்டு பெரிய அளவுக்கு செல்ல வேண்டிய வீரரின் கரியர் குறைபடு கரியராக மாறியது.

 

ஸ்டூவர்ட் பிராட் கூடத்தான் 2007 உலகக்கோப்பையில் நம் யுவராஜ் சிங்கினால் 6 சிக்சர்கள் விளாசப்பட்டார். அதன் பிறகு அவர் எழுச்சியுறவில்லையா? கிரிக்கெட்டில் இது மிக சகஜமானது.

 

இந்திய அணியில் உலகக்கோப்பை உதாரணம் சொல்ல வேண்டுமெனில் 1996 உலகக்கோப்பையில் சாம்பியன் இலங்கை அணி இந்திய வேகப்பந்து வீச்சாளர் மனோஜ் பிரபாகர் பந்து வீச்சை வெளுத்து வாங்கியது, சனத் ஜெயசூரியா இவரை 2 ஒவர்களில் 33 ரன்கள் விளாசினார். அதன் பிறகு அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

 

இது போன்று ரஷீத் கான் கரியர் ஆகிவிடக்கூடாது, ஏனெனில் அவர் ஆப்கான் கிரிக்கெட்டின் பிரதிநிதி, இன்னும் நிறைய போட்டிகளில் ஆட வேண்டும், ஆப்கான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இடம் பிடிக்க இவரது பந்து வீச்சு மிக மிக அவசியம்., ஆகவே ரஷீத் கானுக்கு நல்ல கவுன்சிலிங் கொடுத்து அவர் மனம் தளராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது கிரிக்கெட் சகோதரத்துவத்தின் கடமையாகும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close