[X] Close

மாறாத வரலாறு; தொடர்ந்து 7-வது முறையாக இந்தியா அபார வெற்றி; நொறுங்கியது பாகிஸ்தான்- ரோஹித் சதம், திருப்புமுனை குல்தீப், பாண்டியா


7

  • kamadenu
  • Posted: 17 Jun, 2019 00:28 am
  • அ+ அ-

-போத்திராஜ்

ரோஹித் சர்மாவின் அபார சதம், கோலி, ராகுலின் அற்புதமான இன்னிங்ஸ், குல்தீப், பாண்டியாவின் திருப்புமுனை விக்கெட் ஆகியவற்றால், மான்செஸ்டரில் நடந்த  உலகக் கோப்பையின் 22-வது லீக் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

இதன் மூலம் உலகக் கோப்பைப் போட்டியில் 7-வது முறையாக தொடர்ந்து பாகிஸ்தானை வென்றுவரும் சாதனையை , வரலாற்றை இந்திய அணி தக்கவைத்துக்கொண்டது. கடந்த 1992 முதல் 2019-ம்ஆண்டுவரை இந்திய அணியை வீழ்த்த முடியாத பாகிஸ்தானின் சோகம் தொடர்கிறது.  ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தேர்வு செய்யப்பட்டார்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் சேர்த்தது. 337 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. 35 ஓவர்களில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுகளுக்கு 166 ரன்கள் சேர்த்திருநத்போது மழை குறுக்கிட்டு சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.

rrr.jpg 

டிஎல்எஸ் விதிப்படி 35 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 252 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆனால், 86 ரன்கள் குறைவாக இருந்தது. இதையடுத்து 40 ஓவர்களில் பாகிஸ்தானுக்கு வெற்றி இலக்கு 302 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது.

அதாவது 5 ஓவர்களில் 136 எடுக்க வேண்டும் என இலக்கு வைக்கப்பட்டது. இது சாத்தியமானது இல்லை என்பது தெரிந்ததுதான். ஆனால், பாகிஸ்தான் 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் சேர்த்து 89 ரன்களில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி தோல்வி அடைந்தது.

கடந்த 1992-ம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு ஒரு பந்தில் 22 ரன்கள் எனும் சாத்தியமில்லாத இலக்கை டிஎல்எஸ் விதிப்படி நிர்ணயித்தது ஐசிசி நிர்வாகம். அதேபோன்ற நாடகத்தை இப்போது நடத்திவிட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் ரன் ரேட் அதிகரித்துள்ளதே தவிர வேறு ஒன்றும் இல்லை.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 போட்டிகளில்  7 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் 3 தோல்விகள், ஒரு வெற்றி, ஒரு போட்டி ரத்து என 3  புள்ளிகளுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.

koh.jpg 

இந்திய அணியைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர்கள், ராகுல், ரோஹித் சர்மா மிக அற்புதமான இன்னிங்ஸை இருவரும் அளித்தார்கள். நிதானமாகத் தொடங்கிய இருவரும் முகமது அமீர் பந்துவீச்சை கவனத்துடன் கையாண்டார்கள். மோசமான  பந்துகளை தேர்வுசெய்து அடித்த இருவரும் நல்ல தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தார்கள்.

ரோஹித் சர்மா களத்தில் நின்றால் எதிரணிக்கு என்ன நடக்கும், என்னமாதிரியான சேதாரத்தை ஏற்படுத்துவார் என்பதை நிரூபித்துவிட்டார். அமர்க்களமாக ஆடிய ரோஹித் சர்மா 85 பந்துகளில் சதம் அடித்து 140 ரன்களில் ஆட்டமிழந்தார்.  துணையாக ஆடிய தூண் கோலி அரை சதம் அடித்து அணியை கட்டமைத்தார்கள்.

பந்துவீச்சிலும் இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே கட்டுக்கோப்பாக, லைன், லென்த் தவறாமல் பந்துவீசியது. புவனேஷ்வர் காயத்தால் சென்றபோதிலும் விஜய் சங்கர் எடுத்த முதல் விக்கெட் நம்பிக்கையை அளித்தது. ஆனால், பாபர் ஆசம், பக்கர் ஜமான் நின்று இந்திய அணியை அச்சுறுத்தினார்கள்.

vijay.jpg 

ஆனால், குல்தீப், பாண்டியா வீசிய இரு ஓவர்கள்தான் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இருவரும் எடுத்த 4 விக்கெட்டுகளுக்குப்பின் பாகிஸ்தான் நம்பிக்கை உடைந்தது. அதிலும் பாபர் ஆசம் விக்கெட்டை எடுத்த குல்தீப்பின் அற்புதமானது. பந்து வெளியே செல்லும் என நினைத்து அரைகுறையாக முன்காலை நீட்டினார், ஆனால் பந்து திடீரென உள்ளே புகுந்து போல்டாக்கியதை பாபர் ஆசத்தால் நம்ப முடியவில்லை. ஒரு வேளை பாபர் ஆசம் பேக்அன்ட் அக்ராஸ் போயிருந்தால், போல்ட் ஆவதில் இருந்து தப்பி இருக்கலாம்.

அதேசமயம் பாகிஸ்தான் அணியைப் பொருத்தவரை தொடக்கத்தில் இருந்தே கேப்டன்ஷிப் தவறுகள் இருந்தன. டாஸ் வென்று ஆடுகளத்தின் தன்மை அறியாமல் பீல்டிங்கைத் தேர்வு செய்தார் சர்பிராஸ் அகமது. பந்துவீச்சில் ஃபார்மில் இல்லாத ஹசன் அலியை தொடக்கத்தில் பந்துவீசச் செய்து ரோஹித் சர்மாவுக்கு ஷாட் பிட்சாக போட்டுக் கொடுத்தார். அவரும் வெளுத்து வாங்கிவிட்டார்.

வகாப் ரியாஸை தொடக்கத்திலேயே அமீருடன் பந்துவீசச் செய்திருந்தால், இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தி, விக்கெட்டை வீழ்த்தி இருக்கலாம் அதை கோட்டைவிட்டுவிட்டார் சர்பிராஸ் அகமது. பீல்டிங்கிலும் இன்னும் பாகிஸ்தான் தேறவில்லை, பல இடங்களில் பந்தை விட்டுவிட்டு வேடிக்கை பார்த்தனர், 2 ரன் அவுட்டை கோட்டைவிட்டார்கள்.

அதுமட்டுமல்லாமல் இயற்கையாகவே இந்தியாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் விளையாடுவது என்பது மிகுந்த அழுத்தம் தரக்கூடிய போட்டி. இதில் மனஅழுத்தத்தையும், நெருக்கடியையும் சமாளித்து ஆடுவது அவசியம் ஆனால்,  பாகிஸ்தான் வீரர்களுக்கு அதை கையாளத் தெரியவில்லை.

பாகிஸ்தான் அணியின் ஒரே ஆறுதல் முகமது அமீரின் பந்துவீச்சு மட்டுமே, மற்றவர்கள் அனைவரும் இந்திய அணிக்கு பேட்டிங் பயிற்சி அளிக்கும் வகையில்தான் பந்துவீசினார்.

ஒட்டுமொத்தமாக வலிமையான இந்திய அணிக்கு முன் விளையாட இப்போதுள்ள பாகிஸ்தான் அணிக்கு தகுதியும், திறமையும் போதாது.

337 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இமாம் உல் ஹக், பக்கர் ஜமான் ஆட்டத்தைத் தொடங்கினார்கள்.

பும்ராவும், புவனேஷ்வர்குமாரும்  துல்லியமாப் பந்துவீசியதால், தொடக்கத்தில் திணறினர். 2 ஓவர்கள் மட்டும் வீசிய நிலையில் புவனேஷ்வர் குமார் தசைபிடிப்பால் வெளியேறினார். இதனால், புவனேஷ் குமார் வீசிய 5-வதுஓவரின் கடைசி இரு பந்துகளை வீச விஜய் சங்கர் அழைக்கப்பட்டார்.

விஜய் சங்கர் வீசிய முதல் பந்திலேயே இமாம் உல் ஹக் 7 ரன்னில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். 13 ரன்னுக்கு முதல் விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்.

அடுத்து பாபர் ஆசம் வந்து, பக்கர் ஜமானுடன் சேர்ந்தார். நிதானமாக ஆடத் தொடங்கிய இருவரும் நேரம் செல்லச் செல்ல களத்தில் நங்கூரமிட்டு விளையாடினார். ஹர்திக் பாண்டியா, சாஹல், குல்தீப், விஜய் சங்கர் ஓவர்களை அனாசயமாக கையாண்டு பவுண்டரி, சிக்ஸரை அடித்து விளாசினர்.

இதனால் பாகிஸ்தான் ரன்ரேட் 6 ரன்ரேட்டுக்கு குறையாமல் இருந்தது. நிதானமாக ஆடிய பக்கர் ஜமான்  59 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் சிரமப்பட்டனர்.

kul.jpg 

குல்தீப் யாதவ் வீசிய 24-வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது. அரைசதத்தைநோக்கி முன்னேறிய பாபர் ஆசம் 48 ரன்கள் சேர்த்த நிலையில், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

அடுத்து முகமது ஹபீஸ் களமிறங்கி, பக்கர் ஜமானுடன் சேர்ந்தார்.

26-வது ஓவரை குல்தீப் வீசினார். குல்தீப் வீசிய அந்த ஓவரின் 2-வது பந்தை ஸ்வீப் ஷாட் அடிக்க முயன்றார் பகர் ஜமான் ஆனால், பந்து பேட்டின் முனையில் பட்டு சாஹலிடம் கேட்சாக, 62 ரன்னில் வெளியேறினார்.

இந்திய அணிக்கு மிகப்பெரிய தொல்லையாக அமைந்த பாபர் ஆசம், பக்கர் ஜமான் இருவரும் அடுத்தடுத்த குல்தீப் ஓவரில் வீழ்ந்தது, ஆட்டத்தின் போக்கை மாற்றி, இந்திய வீரர்களை குஷிப்படுத்தியது.

அடுத்து, கேப்டன் சர்பிராஸ் அகமது களமிறங்கி, ஹபீஸுடன் இணைந்தார். ஹர்திக் பாண்டியா வீசிய 27-வது ஓவரில் அடுத்த திருப்புமுனை நிகழ்ந்தது. அந்த ஓவரின் 5-வது பந்தை டீப் ஸ்கொயரில் தூக்கி அடிக்க ஹபீஸ் முயன்றபோது விஜய் சங்கரால் கேட்ச் பிடிக்கப்பட்டு 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.

panday.jpg 

அடுத்துவந்த ஷோயிப் மாலிக், வந்தவேகத்தில் ஹர்திக் பாண்டியா பந்தில் இன்சைட் எட்ஜில் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார்.

117 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்த பாகிஸ்தான் அணி அடுத்த 12 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து நம்பிக்கையின்றி தடுமாறியது.

6-வது விக்கெட்டுக்கு சர்பிராஸ் அகமது, இமாத் வாசிம் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறிதுநேரம் மட்டுமே தாக்குப்படித்தனர். விஜய் சங்கர் வீசிய 35-வது ஓவரில் சர்பிராஸ் அகமது 12 ரன்கள் சேர்த்த நிலையில் இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகி வெளியேறினார்.

babr.jpg 

அடுத்துவந்த சதாப் கான், இமாத் வாசிமுடன் சேர்ந்தார். 36-வது ஓவரின் போது மழை குறுக்கிட்டது. அப்போது பாகிஸ்தான் அணி  6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் சேர்த்திருந்தது.

அதன்பின் ஆட்டம் தொடங்கியபின் 5 ஓவர்களில் 136 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அணி 40 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வி அடைந்தது. இமாத் வாசிம் 46, சதாப் கான் 20 ரன்களில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்தியத் தரப்பில் விஜய்சங்கர், பாண்டியா, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close