[X] Close

ரோஹித் 2-வது சதம்: பாகிஸ்தானுக்கு 337 ரன்கள் இலக்கு: அவுட் இல்லாததற்கு வெளியேறினார் கோலி


2-337

  • kamadenu
  • Posted: 16 Jun, 2019 19:47 pm
  • அ+ அ-

-போத்திராஜ்

மான்செஸ்டரில் நடந்துவரும் உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற 337 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்தது. உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகஇந்திய அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் அபாரமான சதம், ராகுல், கோலியின் அரைசதம் ஆகியவை இந்திய அணி மிகப்பெரிய இலக்கை அடைய காரணமாகும்.

முகமது அமீர் வீசிய 48-வது ஓவரில் 5வது பந்து பவுன்ஸர் வீச, அது கோலிக்கு தலைக்கு மீது சென்றது. அதை அடிக்க முயன்றபோது பேட்டில் பட்டதாக நினைத்து கோலி தாமாகவே வெளியேறினார். ஆனால், தொலைக்காட்சி ரீப்ளேயில் பார்த்தபோதுதான் அது அவுட் இல்லை எனத் தெரியவந்தது. இதைப் பார்த்த கோலி, ஓய்வுஅறையில் மிகுந்த அதிருப்தி அடைந்தார்.

ஓல்ட்டிராபோர்ட் மைதானம் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என்று நம்பி டாஸ்வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஆனால், அவர் நினைத்தது ஒன்று, நடந்தது ஒன்றாகிவிட்டது. சிறிது நேரத்துக்கு மட்டும் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்த மைதானம் அதன்பின் பேட்டிங்கிற்கு மாறியது.

அதுமட்டுமல்லால் தொடக்கத்திலேயே 2 ரன் அவுட்களை பாகிஸ்தான் வீரர்கள் கோட்டை விட்டனர். இந்த வாய்ப்பை ராகுல், ரோஹித் சர்மா நன்கு பயன்படுத்தி வெளுத்துவாங்கிவிட்டனர். பீல்டிங்கிலும் பாகிஸ்தான் வீரர்கள் எந்தவிதமான முன்னேற்றத்தையும் அடையவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது பீல்டிங்கைத் தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியில் இமாத் வாசிம், சதாப் கான் ஆகிய இரு சுழற்பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டனர்.

இந்திய அணியில் காயமடைந்த ஷிகார் தவணுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர் சேர்க்கப்பட்டார்.

ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினார்கள். முகமது அமீர் தனது முதல் ஓவரை மெய்டனாக வீசிநெருக்கடி ஏற்படுத்தினார்.

பதற்றத்துடனே ராகுலும், ரோஹித்தும் காணப்பட்டனர். ஹசன் அலி வீசிய 2-வது ஓவரில் ரோஹித் சர்மாவின் பேட்டில் பட்டு இன்செட் எட்ஜ் எடுத்து பவுண்டரி சென்றது.

அதன்பின் ஹசன் அலி ஓவரை மட்டும் ரோஹித் சர்மா குறிவைத்து அடித்து நொறுக்கி பவுண்டரிகளாக விளாசினார். இதனால் ரன்வேக மெடுத்தது.

rahu.jpg 

பந்துவீச்சு மாற்றப்பட்டு வகாப் ரியாஸ் பந்துவீச வந்தாலும், அவரின் ஓவரிலும் ரோஹித் பவுண்டரி அடித்தார்.

வேகப்பந்துவீச்சு எடுக்கவில்லை என்பதால், 9-வது ஓவர் சுழற்பந்துவீச்சாளர் இமாத் வாசிமுக்கு மாற்றப்பட்டது. 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்தது.

சதாப் கான் வீசிய 12-வது ஓவரில் ரோஹித் சர்மா 2 பவுண்டரிகள், ஒருசிக்ஸர் என 17 ரன்கள் விளாசினார். அதிரடியாக பேட் செய்த ரோஹித் சர்மா 34 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

ரோஹித் சர்மா, ராகுலின் நிதான பேட்டிங்கால் ஸ்கோர் 18 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக தொடக்க ஜோடி அடித்த அதிகபட்ச ஸ்கோரை இருவரும் பதிவு செய்தனர்.

அதன்பின் ரோஹித் சர்மாவும், ராகுலும் அதிரடியில் இறங்கினர். பாகிஸ்தான் வீர்ர்கள் ஷோயிப் மாலிக், முகமது ஹபீஸ்  பந்துவீ்ச்சை இருவரும் நொறுக்கி எடுத்து ஓவருக்கு சிக்ஸர், பவுண்டரி விளாசினார்கள்.

amir.jpg 

வகாப் ரியாஸ் வீசிய 24-வது ஓவரில் ராகுல் 57 ரன்கள் சேர்த்த நிலையில் பாபர் ஆசமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 136 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்துவந்த கோலி, ரோஹித் சர்மாவுடன் இணைந்தார். கோலி நிதானமாக பேட் செய்ய ரோஹித் சர்மா தனது இயல்பான அதிரடிக்கு மாறினார். இருவரும் ஓவருக்கு ஒருபவுண்டரி விளாசி ரன்ரேட்டை சீராக கொண்டு சென்றனர்

 பாகிஸ்தான் பந்துவீச்சை அனாயசமாக எதிர்கொண்ட ரோஹித் சர்மா 84 பந்துகளில் சதம் அடித்தார். இது சர்வதேச அரங்கில் 24-வது சதம், நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் 2-வது சதமாகும். இந்திய அணி 35-வது ஓவரில் 200 ரன்களைத் தொட்டது.

அதன்பின் கோலியும், ரோஹித் சர்மாவுடன் சேர்ந்து அதிரடியில் இறங்கி ரன்களைச் சேர்க்கத் தொடங்கினார்கள். ஹசன் அலி வீசிய 39 ஓவரில் வகாப் ரியாஸிடம் கேட்ச் கொடுத்து 140 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். இவரி் கணக்கில் 14 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடங்கும். 2-வது விக்கெட்டுக்கு இருவரும் 98 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

51 பந்துகளில் விராட் கோலி அரைசதம் அடித்தார். அடுத்துவந்த ஹர்திக் பாண்டியா வந்தவேகத்தில் 2 பவுண்டரி, ஒருசிக்ஸர் விளாசி 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தோனி அதிரடியாக பேட் செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒரு ரன்னில் அமீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

kk.jpg 

அடுத்துவந்த விஜய் சங்கர் , கோலியுடன் இணைந்தார். களத்தில் கோலி 76 ரன்னிலும், விஜய் சங்கர் 3 ரன்னிலும் இருந்த போது மழை குறுக்கிட்டது. 15 நிமிடங்கள் இடைவெளியில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

அமீர் வீசிய 48-வது ஓவரில் 77 ரன்கள் சேர்த்திருந்தபோது கோலி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேதார் ஜாதவ், விஜய் சங்கருடன் சேர்ந்தார். இருவரும் கடைசிநேரத்தில் அடித்து ஆட முற்பட்டபோதிலும் பந்துகள் சரியாக சிக்கவில்லை என்பதால், ஒரு ரன், இரு ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ஜாதவ் 9 ரன்னிலும், விஜய் சங்கர் 15 ரன்னிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 10 ஓவர்களில் 88 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

பாகிஸ்தான் தரப்பில் முகமது அமீர் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close