[X] Close

பாகிஸ்தானுடன் இன்று பலப்பரீட்சை: ஆதிக்கத்தை தொடரும் முனைப்பில் இந்தியா


  • kamadenu
  • Posted: 16 Jun, 2019 08:56 am
  • அ+ அ-

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் மான்செஸ்டர் நகரில் உள்ள ஓல்டு டிராப்ஃபோர்டு மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 3 ஆட்டங்களில் விளையாடி 5 புள்ளிகளை பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணியானது அடுத்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இதைத் தொடர்ந்து நியூஸிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி மோத இருந்த ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று தனது பரம வைரியான பாகிஸ்தானை எதிர்கொள்கிறது விராட் கோலி படை.

உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இதுவரை மோதியுள்ள 6 ஆட்டங்களிலும் இந்திய அணி வாகை சூடியுள்ளது. இது விராட் கோலி குழுவினருக்கு கூடுதல் நம்பிக்கையை அளிக்கக்கூடும். வழக்கமான தொடக்க வீரரான ஷிகர் தவண் காயம் அடைந்துள்ளதால் அவரது இடத்தில் கே.எல்.ராகுல் களமிறங்க உள்ளார்.

ரோஹித் சர்மாவுடன் இணைந்து கே.எல்.ராகுல் நிலையான தொடக்கம் கொடுக்கும் பட்சத்தில் அது நடுவரிசை பேட்டிங்குக்கு பேருதவியாக இருக்கும். கடந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி (107) சதம் விளாசியிருந்தார். இதனால் இம்முறையும் அவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும்.

ஹர்திக் பாண்டியாவின் அதிரடி, நிலைக்கு தகுந்தபடி விளையாடும் தோனி, கேதார் ஜாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்ப்பவர்களாக உள்ளனர். கே.எல்.ராகுல் களமிறங்கிய 4-வது இடத்தில் தினேஷ் கார்த்திக் அல்லது விஜய் சங்கர் களமிறக்கப்படக்கூடும்.

போட்டி நடைபெறும் ஓல்டு டிராஃபோர்ட் மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்பதால் இந்திய அணி கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளருடன் களமிறங்க வாய்ப்பு உள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் சுழற்பந்தில் சிறப்பாக விளையாடக்கூடியவர்கள் என்பதால் யுவேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு மொகமது ஷமிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும்.

சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகளிடம் 105 ரன்களில் சுருண்டு படுதோல்வியை சந்தித்தது. இதன் பின்னர் அடுத்த ஆட்டத்தில் பட்டம் வெல்லக்கூடிய வாய்ப்பில் முன்னணியில் இருக்கும் இங்கிலாந்து அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது.

இதைத் தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக விளையாட இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இதையடுத்து தனது 4-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி அந்த ஆட்டத்தில் 41 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் பிற்பாதியில் பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அபார செயல்திறனை வெளிப்படுத்தினர். அதிலும் மொகமது அமிர் 5 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டத்தை பாகிஸ்தான் அணியின் கட்டுக்குள் கொண்டு வந்தார். ஆனால் மோசமான பேட்டிங் காரணமாகவே பாகிஸ்தான் அணி தோல்விடைய நேரிட்டது.

பேட்டிங்கை பலப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் ஷோயிப் மாலிக் நீக்கப்பட்டு ஹாரிஸ் சோகைல் சேர்க்கப்படக்கூடும். ஷோயிப் மாலிக் இரு ஆட்டத்தில் விளையாடி வெறும் 8 ரன்களே சேர்த்துள்ளார். அதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டக் அவுட் ஆகியிருந்தார்.

டாப் ஆர்டர் வீரர்களான இமாம்-உல்-ஹக், பஹர் ஸமான், பாபர் அஸாம், மொகமது ஹபீஸ் ஆகியோரிடம் இருந்து தொடர்ச்சியான செயல்பாடு இல்லாதது அணியின் பலவீனமாக பார்க்கப்படுகிறது. மேலும் வேகப்பந்து வீச்சில் மொகமது அமிர் மட்டுமே நம்பிக்கை அளிக்கக்கூடியவராக உள்ளார். வகாப் ரியாஸ், ஷாஹீன் ஷா அப்ரீடி ஆகியோர் அதிக ரன்களை தாரை வார்ப்பதும் அணியின் செயல்திறனை பாதிப்பதாக உள்ளது.

எனினும் இன்றைய ஆட்டத்தில் இவர்கள் மேம்பட்ட பந்து வீச்சை வெளிப்படுத்துவதில் முனைப்பு காட்டக்கூடும். மேலும் பீல்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதிலும் பாகிஸ்தான் அணி தீவிரம் காட்டக்கூடும். ஏனெனில் இந்தத் தொடரில் அந்த அணி 3 ஆட்டங்களிலும் பல்வேறு கேட்ச்களை தவறவிட்டிருந்தது.

முந்தைய சாதனைகள் மற்றும் தற்போதைய பார்மின் அடிப்படையில் இன்றைய ஆட்டமானது இந்திய அணிக்கே சாதகமாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஆனால் கணிக்க முடியாத அணி என பெயரெடுத்துள்ள பாகிஸ்தான் போட்டியின் தினத்தில் எந்த அணியையும் வீழ்த்தக்கூடிய திறனை கொண்டுள்ளது என்பதையும் மறுக்க முடியாது.

2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணியை வென்றது போன்ற செயல்திறனை மீண்டும் பிரதிபலிக்கச் செய்வதில் பாகிஸ்தான் அணி அக்கறை காட்டக்கூடும். எனினும் அது அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை என்றே கருதப்படுகிறது. விராட் கோலி படையை வெல்ல வேண்டுமெனில் பாகிஸ்தான் அணி அனைத்து துறைகளிலும் மேம்பட்ட திறனை வெளிப்படுத்தியாக வேண்டும்.

உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இந்திய அணியை வெல்ல வேண்டும் என பாகிஸ்தான் அணியும், அந்த அணிக்கு எதிராக இதுவரை தோல்வியை சந்திக்காத சாதனையை தொடர வேண்டும் என இந்திய அணியும் களமிறங்குகின்றன. எப்போதுமே இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதற்கு இம்முறையும் விதிவிலக்கு இருக்கப் போவதில்லை.

அணிகள் விவரம்

இந்தியா: விராட் கோலி (கேப்டன்),ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், தோனி, கேதார் ஜாதவ், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், மொகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷிகர் தவண்.

பாகிஸ்தான்: சர்ப்ராஸ் அகமது (கேப்டன்), பஹர் ஸமான், இமாம்-உல்-ஹக், பாபர் அஸாம், ஹாரிஸ் சோகைல், ஆசிப் அலி, ஷோயிப் மாலிக், மொகமது ஹபீஸ், இமாத் வாசிம், ஷதப் கான், வகாப் ரியாஸ், மொகமது அமிர், ஹசன் அலி, ஷாஹீன் ஷா அப்ரீடி, மொகமது ஹஸ்நயின்.

மழை பெய்ய வாய்ப்பிருக்கா?

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இதுவரை மழை காரணமாக 4 ஆட்டங்கள் ரத்தாகி உள்ளன. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று மோத உள்ள மான்செஸ்டர் நகரில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் ஆடுகளம் மற்றும் அதன் வெளிப்புற பகுதி தார்ப்பாய்கள் கொண்டு மூடப்பட்டது.

மழை பெய்த சில மணி நேரங்களில் மான்செஸ்டர் நகரில் சூரிய வெளிச்சம் பிரகாசமாக இருந்தது. இது உலகம் முழுவதும் இருந்து இந்தியா - பாகிஸ்தான் போட்டியை நேரில் காண வந்துள்ள ரசிகர்களின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்திருந்தது.

ஆனால் மான்செஸ்டர் நகரில் இன்று பிற்பகலில் இந்திய நேரப்படி மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டமும் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.

தோற்றால் நெருக்கடி..

பாகிஸ்தான் அணி இன்று தனது 5-வது ஆட்டத்தில் மோதுகிறது. இதுவரை 3 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ள பாகிஸ்தான் அணி இன்றைய ஆட்டத்தில் தோல்வியடைந்தால் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் பின்னடைவை சந்திக்கும். மேலும் எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்படும்.

1999-ல் எளிதான வெற்றி

ஓல்டு டிராஃப்போர்டு மைதானத்தில் 1999-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை இந்தியா 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 228 ரன்கள் இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணி 180 ரன்களில் சுருண்டிருந்தது. வெங்கடேஷ் பிரசாத் 5 விக்கெட்கள் வீழ்த்தியிருந்தார். இந்த ஆட்டம் கார்கில் போர் நிகழ்ந்த சமயத்தில் நடைபெற்றது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close