[X] Close

லயோனெல் மெஸ்ஸி- இந்த கால்பந்தாட்ட வீரரின் வருமானம் நிமிடத்துத்துக்கு 20 லட்ச ரூபாய்..!


lionell-messi-story

  • kamadenu
  • Posted: 10 Jun, 2018 12:03 pm
  • அ+ அ-

கிரிக்கெட் ஜுரம் கடந்து கால்பந்து ஜுரம் வரப் போகிறது. ஜூனில் தொடங்கும் 21-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்காக ரஷ்யா தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறது. கால்பந்தாட்ட வீரர்களும்தான்!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு சச்சின் எப்படியோ, அப்படித்தான் கால்பந்து ரசிகர்களுக்கு லயோனல் மெஸ்ஸி. கால்பந்து மைதானத்தில் விட்டிலாய் பறந்து எதிரணியின் கோல் எல்லையைத் தாக்கும் அவர், அர்ஜென்டினா கால்பந்து அணிக்காக 61 கோல்கள், பார்சிலோனா கால்பந்து கிளப் அணிக்காக 551 கோல்கள் உட்பட நூற்றுக்கணக்கான கோல்களை அடித்துள்ளார். உலகின் சிறந்த கால்பந்து வீரருக்கான ‘பிஃபா’ விருதை 5 முறை வென்றுள்ள இவரைப் போன்ற வீரர் தங்களுக்குக் கிடைக்க மாட்டாரா என்று ஒவ்வொரு அணியும் தவம் கிடக்கிறது.

உலகின் பணக்கார விளையாட்டு வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள மெஸ்ஸி, ஆண்டுக்கு 1,021.34 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது. இதன்படி பார்த்தால், கால்பந்து மைதானத்தில் நிற்கும் ஒவ்வொரு நிமிடத் துக்கும் தலா 20 லட்ச ரூபாயைச் சம்பாதிக்கிறார் மெஸ்ஸி! ஆனால், இந்த அளவுக்குப் புகழ்பெற்ற மெஸ்ஸியை ஒரு காலத்தில் தங்கள் அணியில் சேர்த்துக்கொள்ளவே பலரும் தயங்கினார்கள் என்றால் நம்ப முடிகிறதா..? ஆனால், அதுதான் உண்மை. அதற்குக் காரணம் அவரைப் பாதித்த நோய்.

அர்ஜென்டினாவில் புரட்சியாளர் சே குவேரா பிறந்த ரோசாரியோ நகரில்தான் லயோனல் மெஸ்ஸியும் பிறந்தார். ஸ்டீல் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மெஸ்ஸியின் தந்தை ஜார்ஜ் மெஸ்ஸி, அப்போது உள்ளூர் கால்பந்து அணியான கிராண்டோலியின் பயிற்சியாளராக இருந்தார். அவருடன் தினமும் கால்பந்து மைதானத்துக்குச் சென்றுவந்த மெஸ்ஸி, சீக்கிரமே கால்பந்து விளையாட்டைக் கற்றுக் கொண்டார். இதனால் இவர் 5 வயதிலேயே கிராண்டோலியின் சிறுவர் களுக்கான அணியில் இடம் பிடித்தார்.தொடர்ந்து தீவிர பயிற்சியால் கால்பந்து விளையாட்டை வசமாக்கிக்கொண்ட மெஸ்ஸி, 8 வயதில் நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் அணியில் இடம் பிடித்தார். அடுத்த சில ஆண்டுகளிலேயே தன் அசாத்தியமான திறமையால் அந்த அணியின் கனவு நாயகனாக உருவெடுத்தார். மெஸ்ஸியின் அசாத்திய திறமையால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு மற்ற உள்ளூர் கிளப்புகளால் வெல்ல முடியாத அணியாக நியூவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் உருவெடுத்தது. மெஸ்ஸியின் புகழும் உள்ளூரில் வேகமாகப் பரவியது.

இந்தச் சூழ்நிலையில்தான் ஹார்மோன் டிஃபிஷியன்ஸி (harmone deficiency) எனப்படும் வளர்ச்சிக் குறைபாடு நோய் மெஸ்ஸியைப் பாதித்தது. இதனால் அவர் உயரமாக வளர்வது தடைபட்டது. “இவன் இயல்பாக வளரவேண்டுமானால் அதற்கென உள்ள ஊசி மருந்தை தினமும் போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்கள் மருத்துவர்கள். ஆனால், அந்த ஊசி மருந்தை வாங்கித் தருமளவுக்கு மெஸ்ஸியின் தந்தைக்கு வருமானம் இல்லை. மெஸ்ஸி விளையாடும் கால்பந்து கிளப்பும் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

இதைத்தொடர்ந்து பல்வேறு கிளப்புகளில் மெஸ்ஸிக்காக ஏறி இறங்கினார் மெஸ்ஸியின் தந்தை. ஆனால், வளர்வதற்கு சாத்தியக் கூறுகள் குறைந்த குள்ளமான ஒரு வீரருக்காகப் பணத்தை முதலீடு செய்ய அனைவரும் தயங்கினர். எல்லோரும் கைவிரித்த நிலையில்தான் பார்சிலோனா கால்பந்து கிளப்பின் இயக்குநர் கார்லோஸ் ரெக்சாக், மெஸ்ஸிக்கு உதவ முன்வந்தார். “நாங்கள் உதவி செய்கிறோம் ஆனால், ஸ்பெயினுக்கு வந்து தங்கள் கிளப்புக்காக மெஸ்ஸி ஆடவேண்டும்” என்பது அவரது நிபந்தனை. இதற்குச் சம்மதித்து உடனே ஒப்பந்தம் எழுதத் தயாரானார் மெஸ்ஸியின் தந்தை. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒப்பந்தம் போட்டுக்கொள்ள அப்போது சரியான காகிதம் கிடைக்கவில்லை. கையில் கிடைத்த ஒரு பேப்பர் நாப்கினில் இதற்கான ஒப்பந்தத்தில் இரு தரப்பினரும் கையெழுத்திட்டனர். (அந்த பேப்பர் நாப்கினை இன்னும் ஃபிரேம் போட்டு வீட்டில் பத்திரமாக வைத்துள்ளார் லயோனல் மெஸ்ஸி). இதையடுத்து தந்தையுடன் ஸ்பெயினுக்குப் புறப்பட்டார் மெஸ்ஸி.

ஆரம்ப நாட்களில் பார்சிலோனா கிளப்பின் மற்ற இயக்குநர்கள் மெஸ்ஸியை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஹார்மோன் குறைபாடு உடைய ஒருவரைத் தண்டமாக அணியில் சுமப்பதாக அவர்கள் கருதினார்கள். மேலும், முதல் ஒரு வருடத்துக்குக் கால்பந்து போட்டிகளில் ஆட மெஸ்ஸிக்குப் போதுமான வாய்ப்புகளும் வழங்கப்படவில்லை. புதிய இடம், புதிய மனிதர்கள் என்று புதிய சூழலோடு ஒட்டிப்போக மெஸ்ஸிக்குப் பல சங்கடங்கள் இருந்தன. ஆனாலும், பெரிய கால்பந்து வீரனாக வேண்டும் என்ற கனவுக்காக அனைத்தையும் பொறுத்துக்கொண்டார்.

இடைப்பட்ட நேரத்தில் மெஸ்ஸிக்கு சிகிச்சைகளும் நடந்தன. இதனால் மற்றவர்களைப் போலவே சராசரி உயரம் பெற்ற மெஸ்ஸி, கால்பந்து உலகில் மற்றவர்களை விட மிக உயர்ந்த இடத்துக்கு செல்லத் தொடங்கினார்.

பார்சிலோனாவின் யூத் அகாடமியில் சில ஆண்டு காலம் பயிற்சியில் ஈடுபட்ட மெஸ்ஸி, 2005-ம் ஆண்டில்தான் அந்த கிளப்பின் சீனியர் அணியில் இடம் பிடித்தார். அதன்பின் பார்சிலோனா அணி பல போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டியது.

பார்சிலோனாவுக்காக ஆடிய அதே நேரத்தில், தன் சொந்த நாடான அர்ஜென்டினா அணியிலும் மெஸ்ஸி ஜொலித்தார். அந்நாட்டின் முன்னாள் கால்பந்து ஜாம்பவானான மரடோனாவின் செல்லப்பிள்ளையாகப் பெயரெடுத்தார்.  2010-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மரடோனா பயிற்சியாளராகவும், மெஸ்ஸி முன்னணி வீரராகவும் களம் இறங்கினர். இந்த இருவரின் ஜோடியை ‘மெஸ்ஸிடோனா’ என்று பெயரிட்டு உலகமே கொண்டாடியது. ஆனால், அந்தமுறை அர்ஜென்டினாவால் உலகக் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதைத்தொடர்ந்து, கடந்த 2014-ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையிலும் அர்ஜென்டினா வுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத்தர போராடினார். ஆனால், இறுதிப் போட்டியில் ஜெர்மனியிடம் 1-0 என்ற கோல்கணக்கில் தோற்று கோப்பையைத் தவறவிட்டது அர்ஜென்டினா. இதைத் தொடர்ந்து கோபா அமெரிக்கா கோப்பையிலும் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா தோற்க, விரக்தியின் விளிம்பிற்கே சென்ற மெஸ்ஸி இனி, சர்வதேசப் போட்டிகளில் ஆடுவதில்லை என்று துக்கத்துடன் அறிவித்தார்.

கால்பந்து ரசிகர்களின் வற்புறுத்தலால் மீண்டும் அணிக்குத் திரும்பிய மெஸ்ஸி, கடந்த இரண்டு முறையாகக் கைவிட்டுப்போன கோப்பையை இம்முறை எப்படியும் கைப்பற்றி விட வேண்டும் என்ற உத்வேகத்துடன் ரஷ்யாவில் கால் பதிக்கிறார். இம்முறையாவது இவரது கனவு பலிக்கட்டும்!

- பி.எம்.சுதிர்

வாக்களிக்கலாம் வாங்க

காற்றின் மொழி உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close