சென்னை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 4-வது டி20 போட்டியில் ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில்லின் அதிரடியால் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி இன்று ஹராரேயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வெஸ்லி மத்வேர் 25 ரன்கள் எடுத்தும், மருமனி 32 ரன்கள் எடுத்தும் அணிக்கு நல்ல தொடக்கம் தந்து ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய பென்னெட் 9 ரன்களின் ஆட்டமிழக்க, அடுத்து வந்த கேம்பெல் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராஸா 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் 20 ஓவர்களின் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் கலீல் அகமது அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15.2 ஓவர்களில் 156 ரன்கள் விளாசினார்கள். இதனால் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 பந்துகளில் 93 ரன்களுடனும் (13 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), சுப்மன் கில் 39 பந்துகளில் 58 ரன்களுடனும் (6 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்) களத்தில் இருந்தனர்.