[X] Close

விராட் கோலி மட்டுமே உலகக்கோப்பையை தனிநபராக வெல்ல முடியாது: சச்சின் டெண்டுல்கர் திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 18:19 pm
  • அ+ அ-

-பிடிஐ

விராட் கோலி மிகச்சீரான முறையில் பிரமாதமான இன்னிங்ஸ்களினால் பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்று கொடுத்திருக்கலாம் ஆனால் உலகக்கோப்பைத் தொடரில் அவர் ஒரு தனிநபராக ஒரு போதும் உலகக்கோப்பையை வெல்ல முடியாது, மற்ற வீரர்களும் தங்கள் ஆட்டங்களை மேம்படுத்த வேண்டும் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

 

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

 

ஒவ்வொரு போட்டியிலும் இரண்டு வீரர்கள் தங்கள் ஆட்டத்தை வேறு மட்டத்துக்குக் கொண்டு செல்வது அவசியம், அணியினர் உதவியின்றி நீங்கள் அதிகம் எதுவும் செய்து விட முடியாது. ஒரேயொரு தனிநபரால் (விராட் கோலி) ஒரு தொடரையே வெல்ல முடியாது. ஆம் வழியில்லை.  ஒவ்வொரு முக்கியக் கட்டத்திலும் பிற வீரர்களும் பங்களிப்ப்பு செய்வது அவசியம். இது நடக்கவில்லையெனில் நிச்சயம் ஏமாற்றமே மிஞ்சும்.

 

அதே போல் 4ம் நிலை என்பது வெறும் எண் தான். அந்த இடத்தில் ஆட நம்மிடையே பேட்ஸ்மென்கள் உள்ளனர். எனவே அந்த இடம் அட்ஜஸ்ட் செய்யக் கூடியதுதான், எனவே 4ம் நிலை என்று ஊதிப்பெருக்கப்படும் ஒரு இடம் பெரிய பிரச்சினையில்லை என்றே நான் கருதுகிறேன். 4, 6, அல்லது 8 என்று எந்த இடமாக இருந்தாலும் அங்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும் அளவுக்கு நம் வீரர்கள் போதிய கிரிக்கெட் அனுபவம் உள்ளவர்கள்தான். சூழ்நிலை குறித்த விழிப்புணர்வு மிக முக்கியம்.

 

‘காணாமல் போன ரிவர்ஸ் ஸ்விங்’

 

ஒருநாள் கிரிக்கெட்டில் இரு முனைகளிலும் இரு வேறு பந்துகள், மட்டைப் பிட்ச்கள் ஆகியவை ஒருதலைபட்சமாகி பவுலர்களுக்கு கடும் சிரமங்கள் ஏற்பட்டு வருகிறது. ஒரு அணி 350 ரன்கள் அடிக்கிறது, எதிரணி 45 ஓவர்களில் அதை விரட்டி முடிக்கிறது.

 

பந்து 50 ஓவர்களிலும் வன்மையாகவே உள்ளது, கடைசியாக ஒருநாள் போட்டியில் நாம் எப்போது ரிவர்ஸ் ஸ்விங்கைப் பார்த்தோம்?

 

நாங்கள் ஆடும்போது ஒரேயொரு பந்துதான்.  28 அல்லது 30வது ஓவரில் ரிவர்ஸ் ஸ்விங் ஆகும். சில அணிகள் இன்னும் முன்னரே கூட ரிவர்ஸ் ஸ்விங் வீசும். முடிவு ஓவர்களின் போது பந்து மென்மையாகிவிடும், பந்து பழுப்பாக மாறிவிடும், இதெல்லாம் பேட்ஸ்மென்களுக்கான சவால்கள், ஆனால் இப்போது பந்து கடைசி வரை வன்மையாக உள்ளது, பேட்ஸ்மென்களின் மட்டைகளும் வலுவாக மாறிவிட்டன.

 

இது பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும், இந்த நிலைக்குத் தீர்வு காண வேண்டும். ஒன்று பவுலருக்கு உதவிகரமான பிட்ச்களைத் தயாரிக்க வேண்டும், அல்லது பழைய மாதிரி ஒரேயொரு பந்தில் 50 ஒவர்களும் வீசப்பட வேண்டும், இப்படியென்றால் ரிவர்ஸ் ஸ்விங் சாத்தியம். ஏதோ ஒன்று செய்யட்டும், பவுலர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டமா?

 

ரிஸ்ட் ஸ்பின்னர்கள்: குல்தீப் யாதவ், சாஹல் எப்படி?

 

என்னதான் பேட்ஸ்மென்கள் ரிஸ்ட் ஸ்பின்னை புரிந்து கொண்டு விட்டாலும் சில வேளைகளில் விக்கெட்டுகளைக் கொடுப்பதுதான் நடந்துள்ளது. ஆகவே குல்தீப், சாஹல் போன்ற ரிஸ்ட் ஸ்பின்னர்கள் ஆஸ்திரேலியா தொடரை நினைத்துக் கவலைப்படக்கூடாது.

 

ஆஸ்திரேலிய வீரர்கள் இவர்கள் இருவரையும் சரியாகக் கணித்தனர் என்பது உண்மையே, ஆனால் அதற்காக பேட்ஸ்மென்கள் தவறே செய்ய மாட்டார்கள் என்று கருத முடியாது. அல்லது தவறு செய்யவே வைக்க முடியாது என்று அர்த்தமல்ல.

 

முரளிதரனை எடுத்துக் கொள்ளுங்கள் அவர் மரபான ஆஃப் ஸ்பின் பந்துகளுடன் தூஸ்ராவை கலந்து வீசுவார். பேட்ஸ்மென்கள் முரளியை கணிக்கவேயில்லை என்பது அல்ல, கணித்தாலும் முரளி விக்கெட்டுகள் கைப்பற்றுவதைத் தவிர்க்க முடியவில்லை என்பதுதான் உண்மை.

 

சிறந்த பேட்ஸ்மென்களும் தங்கள் கணிப்பில் தவறு செய்யக்கூடியவர்கள்தான். பந்து 4 இஞ்ச் திரும்பும் என்று நினைத்தால் 8 இஞ்ச்கள் திரும்பும்.  பந்தை எட்ஜ் செய்வதற்கு 2 இஞ்ச் திருப்பம் இருந்தால் போதும்.  பேட்ஸ்மெனுக்கு பவுலர் அவுட் ஸ்விங்கர்தான் வீசுகிறார் என்று கணிக்க முடிந்த போதிலும் எட்ஜ் செய்வது சகஜமானதே.

 

இந்திய அணி நல்ல பேலன்ஸுடன் திகழ்கிறது. 8-10 ஆண்டுகள் அனுபவமிக்க வீரர்கள் உள்ளனர். அதோடு இளம் திறமைகளான குல்தீப், சாஹல், ஹர்திக், பும்ரா, ராகுல் ஆகியோர் உள்ளனர். ஆகவே இந்த அனுபவ, இளம் திறமைக் கலப்பு அருமையான அணியை நமக்குக் கொடுத்துள்ளது.  எனவே நம் வாய்ப்பை மிகவும் அதிகபட்சமாக நான் மதிப்பிடுகிறேன்.

 

இவ்வாறு கூறினார் சச்சின் டெண்டுல்கர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close