[X] Close

‘துல்லிய யார்க்கர் வீசுவேன் என்று நினைத்தாயா?’- எலியட்டின் சிக்ஸும் டேல் ஸ்டெய்ன் மீது விழுந்த தீராப்பழியும்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 15:11 pm
  • அ+ அ-

1992 உலகக்கோப்பையில் மிகவும் விசித்திரமான மழை விதிகள் தென் ஆப்பிரிக்காவின் விதியை முடிக்க, 1996-ல் பிரையன் லாரா தென் ஆப்பிரிக்காவை வீட்டுக்கு அனுப்ப 1999-ல் கையில் வந்த இறுதிப் போட்டி வாய்ப்பை அசட்டு ரன் அவுட்டினால் கோட்டை விட்டு ஸ்டீவ் வாஹினால் ‘சோக்கர்ஸ்’ என்ற அடையாளம் பெற்ற தென் ஆப்பிரிக்கா 2015-ல் மீண்டும் இறுதிப் போட்டி வாய்ப்பை தவற விட்டது.

இடையில் 2003, 2007, 2011 என்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு உலகக்கோப்பை இறுதியில் நுழைவது என்பது அசாத்திய கனவாகவே இருந்தது.

2015 அரையிறுதியில் ஈடன் பார்க்கில் நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் இம்முறை குற்றவாளி டேல் ஸ்டெய்ன்.  சிக்ஸ் அடித்தது கிராண்ட் எலியட்.

மழையால் பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்து 43 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது. நியூஸிலாந்து அணிக்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் இலக்கு என்று டக்வொர்த் லூயிஸ் முறைப்படி மாற்றி அமைக்கப்பட்டது.

steyn.jpg 

ஸ்டெய்ன்,  பிலாண்டர், மார்கெல் என்று அனைவரும் அடி வாங்கினர், காரணம் தொடக்கத்தில் காட்டடி மன்னர்கள் மார்டின் கப்தில், பிரெண்டன் மெக்கல்லம் இறங்கி வெளுத்துக் கட்டி விட்டனர். டி20யில் கூட அந்த மாதிரி அடியைப் பார்க்க முடியாது. 6 ஓவர்களி 71 ரன்கள். கப்தில் 34 ரன்களை எடுக்க மெக்கல்லம் 26 பந்துகளில் 8 பவுண்டரிகள் 4 சிக்சர்களுடன் 59 ரன்களை விளாசித்தள்ளினார். ஆனால் அதன் பிறகு மீண்டெழுந்த தென் ஆப்பிரிக்கா மொர்கெலின் 2 விக்கெட்டுகள் மூலம் 149/4 என்று நியூஸிலாந்தை சற்றே பின்னடையச் செய்தது.

ஆனால் கிராண்ட் எலியட், கோரி ஆண்டர்சன் இணைந்து ஸ்கோரை 252 ரன்களுக்கு கொண்டு சென்ற போது 38 ஓவர்கள் முடிந்திருந்தன. 5 ஒவர்களில் 46 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை இருந்தது நியூஸிலாந்துக்கு.

கிராண்ட் எலியட் சிலபல ஷாட்களை அடிக்க கடைசி 2 பந்துகளில் 5 ரன்கள் எடுத்தால் நியூஸிலாந்து அணி முதல் இறுதியை எட்டும், கட்டுப்படுத்தினால் தென் ஆப்பிரிக்காவும் தன் முதல் இறுதிப் போட்டியை அடைந்திருக்கும்.

டேல் ஸ்டெய்னிடம் பந்து.. ஏ.பி.டிவில்லியர்ஸ் அவரிடம் என்ன பந்து வீசப்போகிறாய் என்று கேட்ட போது டேல் ஸ்டெய்ன், “நான் இந்த பந்தை துல்லியமாக கிரீசில் விழும் யார்க்கராக வீசுவேன் என்று வாக்குறுதி அளிக்க மாட்டேன். ஏனெனில் பந்து ஈரமாக உள்ளது. ஆகவே பேக் ஆஃப் லெந்து பந்து வீசுகிறேன்” என்றார்

வீசினார்... கிராண்ட் எலியட் இருந்த பார்மிற்கும் வெறிக்கும் ஒரே தூக்கு தூக்கினார் ஷார்ட் பவுண்டரியான லாங் ஆனில் சிக்ஸ்.  முதல் இறுதிக்குள் நுழைந்தது நியூஸிலாந்து.

டேல் ஸ்டெய்ன் அந்த கடைசி பந்து பற்றி போட்டி முடிந்த பிறகுதான் தெரிவித்தார். 1992- உலகக்கோப்பையில் இன்சமாம் உல் ஹக் இன்னிங்சினால் இறுதி வாய்ப்பைக்  கோட்டை விட்ட நியூஸிலாந்து இம்முறை இறுதிக்குத் தகுதி பெற்றது.

தென் ஆப்பிரிக்க அணி மீண்டும் ஒரு ‘சோக்கர்ஸ்’ அடையாளத்துடன் வெளியேறியது. ஏ.பி.டிவில்லியர்ஸுக்கு கடைசி உலகக்கோப்பையாக அமைந்தது. டேல் ஸ்டெய்ன் அதிகபட்சமாக 8.5 ஒவர்கள் வீசி 76 ரன்களுக்கு 1 விக்கெட். ஸ்டெய்ன் மீது ஒரு பெரிய கறை இந்த சிக்ஸினால் விழுந்தது. சேத்தன் சர்மா எப்படி மியாண்டடுக்கு கடைசி பந்து சிக்சரை ஷார்ஜாவில் கொடுத்து வாழ்நாள் முழுதும் தீராப்பழி சுமந்தாரோ ஸ்டெய்னும் தீராப்பழியைச் சுமந்து வருகிறார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close