[X] Close

உலகக்கோப்பை என்பதற்காக வித்தியாசமாக ஆட வேண்டியதில்லை: ரவிசாஸ்திரி பேட்டி


  • kamadenu
  • Posted: 21 May, 2019 19:27 pm
  • அ+ அ-

இந்திய அணி உலகக்கோப்பைக்கு புறப்பட்டுள்ளது. 3வது  முறையாக கோப்பையை இந்தியாவுக்குக் கொண்டு வரும் முனைப்புடன் கடினமான ஒரு சவாலை எதிர்கொள்வது பற்றி பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, கேப்டன் விராட் கோலி செய்தியாளர்கள் சந்திப்பில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

 

கேப்டன் விராட் கோலி சூழ்நிலைமைகள் அல்ல, அழுத்தங்களை எதிர்கொள்வதுதான் முக்கியம் என்று கூற ரவிசாஸ்திரி கூறும்போது, “இந்தத் தொடரைப் பார்க்கும் போது, இது ஒரு வாய்ப்பு அவ்வளவே.  இந்த அணியைப் பார்த்தோமானால் கடந்த 5 ஆண்டுகளாக பிரமாதமான கிரிக்கெட் ஆட்டத்தை விளையாடியுள்ளோம். ஆகவே அதே மாதிரியான சீர்மைக்கு விழைவதுதான் முக்கியமே தவிர, உலகக்கோப்பை என்பதற்காக வித்தியாசமாக ஆட வேண்டியத் தேவையில்லை.

 

உலகக்கோப்பை என்பது ஒரு அரங்கம், அதனை முழுதும் ரசித்து ஆட வேண்டும். களத்தில் இறங்கி உலகக்கோப்பைப் போட்டி என்பதை ரசித்து மகிழ்ச்சியுடன் ஆட வேண்டும். திறமைக்கு ஏற்ப ஆடினால் கோப்பை நம் பக்கம்.

 

இந்த உலகக்கோப்பை மிகவும் சவாலாக இருக்கும், எல்லோரும் எல்லொருடனும் மோத வேண்டியுள்ளது. 2014, 2019 ஆண்டுகளை ஒப்பிட்டுப் பார்த்தால் அணிகளுக்கு இடையே இருக்கும் இடைவெளி நெருக்கமாக உள்ளன. 2014-ல் ஆப்கான் அணி எப்படி இருந்தது, இப்போது பாருங்கள், அதே போல் வங்கதேசத்தைப் பாருங்கள், எனவே இது வலுவான ஒரு சவாலான உலகக்கோப்பை தொடராகும்” என்றார் ரவி சாஸ்திரி.

 

இந்திய அணி மே மாதம் 25-ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும் பிறகு 28ம் தேதி வங்கதேசத்துக்கு எதிராகவும் இரண்டு பயிற்சியாட்டங்களில் ஆடுகிறது.

 

உலகக்கோப்பை பிரதான முதல் ஆட்டத்தில் ஜூன் 5ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும், 9ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும், 13ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராகவும் ஆடி பிறகு ஜூன் 16ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close