[X] Close

ஸ்மித், வார்னரை கேலி செய்யாதீர்கள்: இங்கிலாந்து ரசிகர்களுக்கு மொயின் அலி வேண்டுகோள்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 16:51 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடவரும் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னரை ரசிர்கள் கேலி செய்யாதீர்கள் என்று இங்கிலாந்து ரசிகர்களுக்கு அந்நாட்டு அணி வீரர் மொயின் அலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்து அணியும், ஆஸ்திரேலிய அணியும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பரம வைரிகள். இருஅணிகள் மோதும் ஒருநாள் போட்டி, அல்லது டெஸ்ட் போட்டி என்றாலும் அனல் பறக்கும் விதத்தில்தான் இருக்கும். இருநாட்டு வீரர்களும் ஒருவரை ஒருவர் களத்தில் சீண்டிக்கொள்வதும், உரசிக்கொள்வதும் ஆஷஸ் தொடரில் இயல்பாக நடக்கும்.

இதையும் தாண்டி ரசிகர்களும் ஒருவொருக்கு ஒருவர் சில நேரங்களில் அடித்துக்கொள்வதுண்டு, எல்லைகடந்து வீரர்களைக் கிண்டல் செய்யும்போது, வீரர்கள் ரசிகர்களுடன் சண்டையிட்ட நிகழ்வுகளும் உண்டு. அவ்வாறு ரசிகர்களுடன் சண்டையிட்டதுதான் பந்தை சேதப்படுத்திய சம்பவத்துக்கு வித்தாக அமைந்தது.

ஸ்மித், வார்னர் இருவரும் தென் ஆப்பிரிக்கத் தொடரில் பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியபின் ஒரு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டனர். இந்த தடைக்குப்பின் உலகக் கோப்பைப் போட்டியில் இருவரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆனால் இருவரும் இங்கிலாந்துக்கு வரும்போது, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தை எழுப்பி ரசிகர்கள் கிண்டல் செய்யும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த ஆஸி. பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், " உலகக் கோப்பைப் போட்டியில் ஸ்மித், வார்னர் இருவரும் தங்களுக்கு ஏற்றார்போல் வசதியாக விளையாடுகிறீர்களா, சூழல் ஏற்றதாக இருக்கிறதா என்பதை கூர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அவர்கள் இருவரும் மனிதர்கள்தான் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும் " எனத் தெரிவித்திருந்தார்.

moin ali.jpg 

இதுகுறித்து இங்கிலாந்து அணி வீரர் மொயின் அலி தங்கள் நாட்டு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறுகையில், " ஸ்மித், வார்னர் இருவரும் இங்கிலாந்து வரும்போது, அதிகமான தொந்தரவுகளுக்கும், கிண்டல்களுக்கும் ரசிகர்களால் ஆளாகமாட்டார்கள் என்று நம்புகிறேன். ரசிகர்கள் அனைவரும் கிரிக்கெட் தொடரை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். அதேசமயம், வீரர்களிடம் விளையாட , கிண்டல் செய்ய நினைத்தால், அது நகைச்சுவையாக இருக்கலாமே தவிர தனிப்பட்ட முறையில் கிண்டல் செய்யும் வித்தில் இருக்கக்கூடாது. இங்கிலாந்து வீரர்கள் ஸ்மித், வார்னரை கிண்டல் செய்யமாட்டார்கள் என நம்புகிறேன் " எனத் தெரிவித்தார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close