[X] Close

இங்கிலாந்து வரும்போது எங்களை ‘280 ரன் அணி’ என்றே நினைத்தனர்: பாக். பயிற்சியாளர் மிக்கி ஆர்தர்


280

  • kamadenu
  • Posted: 20 May, 2019 20:35 pm
  • அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-0 என்று பாகிஸ்தான் இழந்ததையடுத்து, உலகக்கோப்பைக்குச் செல்லும் முன் பாகிஸ்தான் அணியின் பீல்டிங் படுமோசமாக உள்ளது கவலையளிக்கிறது என்று பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கவலை வெளியிட்டுள்ளார்.

 

இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஏகப்பட்ட கேட்ச்களை முக்கியத் தருணங்களில் கோட்டை விட்ட பாகிஸ்தான் பீல்டர்கள், ஏகப்பட்ட மிஸ் ஃபீல்ட்கள், ஓவர் த்ரோக்கள், ரன் அவுட்டைக் கோட்டை விடுவது என்று படுமோசமாக பீல்ட் செய்ததையடுத்து தோல்வி ஏற்பட்டது.

 

இதனைக் குறிப்பிட்டு பாகிஸ்தான் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறும்போது, “இரு அணிகளுக்கும் உள்ள மிகப்பெரிய இடைவெளி பீல்டிங். சவுதாம்டனிலும், நாட்டிங்கமிலும் கடைசி 5 ஓவர்களில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் என்ற சூழ்நிலையே நிலவியது, நாங்கள் சவாலாகவே ஆடினோம், ஆனால் ஒன்றேயொன்று, உலகக்கோப்பைக்குச் செல்லும் முன் கவலையளிப்பது பீல்டிங், இது எனக்கு மிகக்கவலையாக உள்ளது.

 

நிறைய அதில் பயிற்சிகள் என்று முயற்சிகளை போடுகிறோம் ஆனால் அதன் பலன்கள் இன்னமும் கைகொடுக்கவில்லை. விரைவு கதியில் இதில் முன்னேற்றம் காண்போம், காண வேண்டும் என்பதே குறிக்கோள்.

 

இந்தத் தொடர் முழுதும் பாக். வீரர்களின் அணுகுமுறை அபாரம். எங்கு குறைபாடு உள்ளது என்பதை அவர்கள் அறிந்துள்ளனர். இது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.

 

இந்தத் தொடரிலிருந்து அணியின் பாசிட்டிவ் அம்சங்களை மட்டுமே நாங்கள் பார்க்கிறோம். நாங்கள் இங்கிலாந்துக்கு வரும்போது பாகிஸ்தானை 280 ரன் அணி என்றே பலரும் கூறினர். ஆனால் நிறைய 300கள் கடந்தோம், ஆகவே பேட்டிங்கில் பெரிய முன்னேற்றம் இது மிகப்பெரிய பாசிட்டிவ் ஆகும்.

 

பவுலிங்கும் பீல்டிங்கும் சராசரியாகத்தான் உள்ளது. மேலும் அவர்கள் மண்ணில் நம்பர் 1 ஆக திகழும் அணியுடன் மோதினோம். எங்கள் அளவுக்கு இங்கிலாந்தில் ஆட உடற்தகுதி இன்னபிற அடிப்படையில் பிற அணிகள் தயாரித்திருக்க வாய்ப்பில்லை.

 

சில துறைகளில் நாங்கள் கூர்மையடைய வேண்டியுள்ளது, ஆனாலும் என்னிடம் உள்ள அணி குறித்து எனக்கு நம்பிக்கை உள்ளது. நன்றாக ஆட வேண்டும் என்ற உறுதி இந்த வீரர்களிடம் இருக்கிறது. ஒவ்வொரு முறை களத்தில் இறங்கும் போதும் 21 கோடி மக்களுக்காக இறங்குகின்றனர். ஆகவே ரசிகர்கள் தோல்வியை எப்படி ஏமாற்றத்துடன் பார்க்கின்றனரோ அதே போல்தான் வீரர்களும் பார்க்கின்றனர்” என்றார் மிக்கி ஆர்தர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close