[X] Close

ஒரு பந்து... ஒரே பந்தில் புகழ் பெற்ற பவுலர் பல்வீந்தர் சிங் சாந்து


  • kamadenu
  • Posted: 17 May, 2019 17:13 pm
  • அ+ அ-

-நோபாலன்

இந்திய அணிக்காக 8 டெஸ்ட் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிய ஸ்விங் பவுலர் பல்வீந்தர் சிங் சாந்து தன் வாழ்க்கையில் ஒரேயொரு பந்துக்காக நினைவில் வைத்துக் கொள்ளப்படுபவர் என்றால் அது மிகையாகாது.

 

ஆனால் அந்த உலகக்கோப்பையில் பல்வீந்தர் சிங் சாந்து அதனை முதல் முறையாகச் செய்யவில்லை. 1979 உலகக்கோப்பை சாம்பியன் கிளைவ் லாய்ட் தலைமை மே.இ.தீவுகளுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெற்ற 1983 உலகக்கோப்பை, இந்திய அணியின் முதல் போட்டியிலேயே சாந்து அதனைச் செய்தார்.

 

அது என்னவெனில் மே.இ.தீவுகளின் அதிரடி தொடக்க வீரர் கார்டன் கிரீனிட்னை பவுல்டு செய்ததாகும். ஜாவேத் மியாண்டட், சேத்தன் சர்மாவை அடித்த கடைசி பந்து சிக்ஸ் எப்படி பாகிஸ்தானில் புகழடைந்ததோ அதே போல் கார்டன் கிரீனிட்ஜை பவுல்டு செய்த இந்தப் பந்து பல்வீந்தர் சிங் சாந்துவை மறக்க முடியாத ஒரு பெயராக்கியது இந்தியாவில்.

 

1983 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் முதல் போட்டியிலேயே மே.இ.தீவுகளுக்கு இந்திய அணி அதிர்ச்சியளித்தது. மான்செஸ்டரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 60 ஓவர்களில் 262 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது, தொடர்து ஆடிய மே.இ.தீவுகள் 130/8 என்று படுசரிவு கண்டது, ஆனால் கார்னர் (37), ராபர்ட்ஸ் (37) என்று ஆடி ஸ்கோரை 228 ரன்களுக்குக் கொண்டு வர ரவி சாஸ்திரி அருமையாக 3 விக்கெட்டுகளையும் கடைசியில் கார்னர் விக்கெட்டையும் வீழ்த்த மே.இ.தீவுகள் 228 ரன்களுக்குச் சுருண்டு அதிர்ச்சித் தோல்வி கண்டது. அதே தினத்தில் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இன்னொரு அதிர்ச்சி நிகழ்ந்தது.

 

இந்த முதல் வெற்றியிலும் பல்வீந்தர் சிங் சாந்து கார்டன் கிரீனிட்ஜை 24 ரன்களில் பவுல்டு செய்தார். மேலும் 12 ஓவர்கள் 36 ரன்களையே கொடுத்தார் சாந்து. இந்தப் போட்டியில் யஷ்பால் சர்மாவின் பேட்டிங்தான் விதந்தோதப்பட்டது 120 பந்துகளில் 89 ரன்களை விளாசினார். கார்னரை வெளுத்துக் கட்டினார் யஷ்பால்.

 

இந்த முதல் போட்டி அதிர்ச்சிக்குப் பிறகே இந்திய அணியும் மே.இ.தீவுகளும் இறுதிப் போட்டியில் மோதின. முதலில் பேட் செய்த இந்திய அணி 183 ரன்களை எடுக்க மே.இ.தீவுகள் அணியில் ரிச்சர்ட்ஸ் ஒரு கையில் அடிப்பார், ஒரு காலில் பேடு கட்டி அடித்து விடுவார் என்றெல்லாம் கருதப்பட்டது. நடந்தது வேறு கதை.

 

ஆனால் நடந்தவற்றுக்கு ஏதாவது ஒரு தருணம் முடுக்கு விசையாக இருக்க வேண்டும், அந்த முடுக்கு விசை தருணம்தான் பல்வீந்தர் சிங் சாந்து, கார்டன் கிரீனிஜுக்கு வீசிய அந்த இன்ஸ்விங்கர்.

 

கார்டன் கிரீனிட்ஜ், டெஸ்மண்ட் ஹெய்ன்ஸ் தொடக்க வீரர்கள்.  இங்கு கபில்தேவ், சாந்து தொடக்க வீச்சாளர்கள், இங்கிலாந்து பிட்ச், வானிலையில் பந்துகள் ஸ்விங் ஆகும் என்பதால் கிரீனிட்ஜ் அதிரடியாகத் தொடங்க முடியவில்லை 11 பந்துகளி 1 ரன் தான் அவர் எடுத்திருந்தார்.  12வது பந்து பல்வீந்தர் சிங் சாந்துவின் பந்து ஆஃப் ஸ்டம்புக்கு சற்று வெளியே பிட்ச் ஆகி உள்ளே ஸ்விங் ஆனது, சாந்து பந்துகளை உள்ளேயும் வெளியேயும் நன்றாக ஸ்விங் செய்பவர். கிரீனிட்ஜ் தன் வாழ்நாளின் மோசமான ஒரு முடிவை எடுத்தார், பந்தை ஆடாமல் விட்டார். பவுல்டு ஆனார். அந்தப் பந்து பிட்சில் உள்ள கூழாங்கல்லில் பட்டு வந்தது என்று பிற்பாடு கேலியா அல்லது அவதூறா என்று தெரியாதபடிக்கு ஒரு செய்தியும் வெளியானது.

 

ஆனால் அந்த ஒரு பந்து மே.இ.தீவுகளின் சரிவுக்குக் காரணமாகி தோல்வியிலும் முடிந்து ‘கபில்ஸ் டெவில்ஸ்’ கோப்பையை வென்று உலகசாம்பியன் ஆனத் தருணத்தின் முடுக்கு விசையாக அமைந்தது.  சாந்துவைப் பற்றி அப்போது விளையாட்டாகக் கூறப்படுவது என்னவெனில் சாந்துவுக்கு தன்னம்பிக்கை அதிகம் அதுவும் ஓவர் தன்னம்பிக்கை என்றும் ரிச்சர்ட்ஸுக்கே பவுன்சர் வீசினார் என்றால் பாருங்களேன் என்று கூறப்படுவதுண்டு. கிரீனிட்ஜும் போட்டி முடிந்தவுடன் அணி நான் அவுட் ஆனதைத்தான் குறை கூறியது என்று அந்தப் பந்தைப் பற்றி கூறியுள்ளார். இந்திய அதிரடி தொடக்க வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ‘நாங்களெல்லாம் அசந்து போய் விட்டோம்’ என்று பிற்பாடு சாந்துவின் இந்தப் பந்து பற்றி தெரிவித்தார். ‘பந்து ஸ்டம்பை அடித்த போது ஏற்பட்ட மோசமான சத்தத்தை என்னால் மறக்க முடியாது’ என்கிறார் கிரீனிட்ஜ். நம்மாலும் கேட்காத அந்தச் சப்தத்தை, காட்சியை மறக்க முடியாது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close