உடுப்பி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்திய சூர்யகுமார் யாதவ்!


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், மனைவி தேவிஷா ஷெட்டியுடன் உடுப்பியில் உள்ள கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தினார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் டி20 உலகக் கோப்பை தொடரில் 8 போட்டிகளில் விளையாடி 10 அபார சிக்ஸர்கள், 15 பவுண்டரிகளுடன் மொத்தம் 199 ரன்கள் குவித்தார். குறிப்பாக டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமாரின் அற்புதமான கேட்சால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த கொண்டாட்டத்தின் நடுவே சூர்யகுமார் யாதவ், தனது மனைவி தேவிஷா ஷெட்டியுடன் கர்நாடகா மாநிலம், உடுப்பிக்கு இன்று சென்றிருந்தார்.

சூர்யகுமார் யாதவின் மனைவி தேவிஷா கர்நாடகா மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். மும்பையில் வசிக்கும் தேவிஷாவும், சூர்யகுமார் யாதவும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர். இதற்கிடையில் இருவரும் காதலித்து 2016-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு தனது மனைவியுடன் உடுப்பியில் கப்புவில் உள்ள மாரிகுடி கோயிலில் சூர்யகுமார் யாதவ் இன்று வழிபாடு செய்தார். அங்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது. கபு கோயிலுக்கு வருகை தந்த சூர்யகுமார் தம்பதியினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன்பின் கோயிலில் சூர்யகுமார் தம்பதியர் நேர்த்திக்கடன் செலுத்தினர். உடுப்பிக்கு சூர்யகுமார் யாதவ் வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.